மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்த 19-வயது இளம்பெண் ஒருவர், இரண்டு அடையாளம் தெரியாத நபர்களால் தான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகாரளித்து போலீசை அலையவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பட்டப்பகலில் இப்படி ஒரு பயங்கர சம்பவம் நடந்ததை அறிந்த நாக்பூர் நகர போலீஸ் கமிஷனர், கூடுதல் கமிஷனர் மற்றும் பிற முக்கிய போலீஸ் அதிகாரிகள் என அனைவரும் கல்மாணா காவல்நிலையத்தை வந்தடைந்தனர்.
அந்த இளம்பெண் அளித்துள்ள புகார் மனுவில் தெரிவித்திருப்பதாவது,
“நான் நடன வகுப்புக்கு இன்று காலை நடந்து சென்றுகொண்டிருந்த போது ஒரு வேனில் 2 நபர்கள் என் அருகே வந்து விலாசம் ஒன்றைக் காட்டி, அங்கு எப்படி செல்ல வேண்டும் என்று வழி கேட்டனர்.
நான் அவர்களுக்கு பதில் சொல்லிக் கொண்டிருக்கும் போதே என்னை வேனுக்குள் தூக்கிப்போட்டுக் கொண்டு சென்றனர். ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு வேனை கொண்டுசென்று, அங்கு வைத்து என்னை பாலியல் வன்கொடுமை செய்தனர்.” இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தை முழுவதுமாக கேட்டறிந்த போலீசார் தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
போலீசார் அந்த பெண் கூறிய வாக்குமூலத்தை மையமாக வைத்து எல்லா இடங்களிலும் இருந்த சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தனர். ஆனால் எந்தவொரு சிசிடிவி பதிவிலும் அந்த இளம்பெண் கூறியவாறு வேன் இல்லை.
இதனால் சந்தேகமடைந்த போலீசார், அந்த பெண் சென்ற இடங்களை எல்லாம் சிசிடிவி பதிவின் மூலம் ஆய்வு செய்தனர். அப்போது தான் அதிர்ச்சி காத்திருந்தது.
அந்த பெண் கூறியவை அனைத்தும் பொய் என்பது தெரிய வந்தது.
சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்ததில், அந்த பெண்மணி சம்பவத்தன்று காலை 9.50 மணிக்கு பேருந்து ஒன்றிலிருந்து இறங்கியுள்ளார். அதன்பின், 10 மணிக்கு ஜான்சி ராணி சதுக்கம் வரை நடந்து சென்றுள்ளார்.
10.15 மணிக்கு ஆனந்த் டாக்கீஸ் சதுக்கத்தில் இருந்து ஆட்டோரிக்ஷாவில் பயணித்துள்ளார். பின் 10.25 மணிக்கு மாயோ ஆஸ்பத்திரியில் இறங்கியுள்ளார்.
அதன்பின், சிக்காலி சதுக்கத்திலிருந்து 10.54 மணிக்கு ஆட்டோரிக்ஷா ஏறியுள்ளார்.
காவல்நிலையத்தின் அருகே இருக்கும் பெட்ரோல் பங்க்கில் பதிவான சிசிடிவி பதிவில் அவர் கல்மாணா காவல்நிலையத்தை நோக்கி 11.04 மணிக்கு நடந்து வருவது பதிவாகியுள்ளது.
இதனையடுத்து அந்த இளம்பெண்ணிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் தன் காதலனை திருமணம் செய்து கொள்வதற்காக இவ்வாறு பொய் கூறியதாக உண்மையை ஒப்புக் கொண்டார். தான் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் வெளியில் தெரிந்தால், தான் விரும்பும் நபருக்கே தன்னை திருமணம் செய்து வைப்பார்கள் என்று எண்ணி இத்தகைய பொய்யான குற்றச்சாட்டை அவர் பதிவு செய்துள்ளார்.
ஆனால், போலீசாரின் நிலை தான் பரிதாபம். புகாரின் உண்மைத்தன்மையை உறுதி செய்யாமல், அந்த பெண்ணை சீரழித்த குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டனை வழங்க வேண்டும் என்னும் நோக்கில் அலைந்து திரிந்து விசாரணை மேற்கொண்டனர். இறுதியில், அத்தனையும் வீண் தான்.