ராசிபுரம் அடுத்த சிங்ளாந்தபுரத்தில் தனது சாவிலாவது தாய் தந்தை ஒன்று சேர வேண்டுமென 12 ம் வகுப்பு மாணவன் தருண் கடிதம் எழுதி வைத்து விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த சிங்களாந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி மேகலா. இவர்களது மகன் தருண் மெட்டாலா அடுத்த ராஜபாளையத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் உயிரியல் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில் வீட்டில் குடும்பத்தகராறு காரணமாக கடந்த சில மாதங்களாக தாய் தந்தை பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதனால் மாணவன் மன அழுத்தத்தில் இருந்து உள்ளார். பின்னர் தூங்குவதாக சென்ற மாணவன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மேலும் தற்கொலைக்கு முன்பு கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துள்ளார். அந்த கடிதத்தில் தாய் தந்தை தனது சாவிலும் இருவரும் ஒன்றாக சேர வேண்டும் எனவும் மேலும், தனது அம்மா மற்றும் அக்காவை பத்திரமாக பார்த்துக் கொள்ளுமாறும், நான் எங்கும் செல்லவில்லை வீட்டின் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பேன் என கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பின்னர் காலையில் குடும்பத்தினர் எழுந்து பார்க்கையில் தருண் தூக்கில் தொங்கியவாறு இருந்துள்ளார்.பின்னர் குடும்பத்தினர் பேளுக்குறிச்சி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கடிதம் மற்றும் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் தருண் தற்கொலை செய்வதற்கு முன்பு எழுதிய கடிதத்தைப் காவல்துறையினர் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது இன்று 12ம் வகுப்பு தேர்வு நடைபெறும் நிலையில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.