தொல்லியல் துறை தன் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை நன்கு பராமரித்தாலும், தினமும் பல ஆயிரம் பேர் வரும் இந்த சுற்றுலா தலத்தை, மகாராஷ்டிர அரசு அக்கறை இல்லாதிருப்பது வருந்தத்தக்கது என்று தமிழ் நாடு பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி கருத்து தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்..
நேற்று மும்பையில் உள்ள எலிஃபென்டா குகைகளுக்கு சென்றிருந்தேன். மும்பை கேட் வேயிலிருந்து சுமார் 12 கிலோ மீ்ட்டர் தூரம் நடுக்கடலில் அமைந்துள்ளது இந்த குகைகள். 1500 ஆண்டுகளுக்கு முந்தைய இந்த குகைகளில் முதல் குகையில் பிரமாண்டமான சிவ பெருமான் சிற்பங்கள் உள்ளன. மிக பெரிய கோவில் இருந்திருக்கும் என கருதப்படுகிறது. மிக பெரிய தூண்கள் மலைக்கு கீழே உள்ள இந்த குகைகளை தாங்கி பிடித்துள்ளன.
பல ஆயிரக்கணக்கான பேர் கூடுமளவிற்கு உள்ள இந்த குகையில் ஏழு விதமான சிவ பெருமான் சிற்பங்கள், லிங்கங்கள் உள்ளன. மேலும், இரண்டாவது மற்றும் மூன்றாவது குகைகளும் ஹிந்து மதம் குறித்த சிற்பங்களை கொண்டுள்ளன. நான்காவது மற்றும் ஐந்தாவது குகைகளில் புத்த மதம் குறித்த மற்றும் புத்தரின் சிற்பங்கள் உள்ளன. காட்டுப் பாதை என்பதால் இந்த இரண்டு குகைகளுக்கும் பொது மக்கள் செல்ல அனுமதியில்லை. ஆனால், விரைவில் மக்கள் கண்டு களிப்பதற்கான பணிகள் துரிதகதியில் நடைபெறுகின்றன.
இந்த குகைகள் இந்திய தொல் பொருள் துறையின் கட்டுப்பாட்டில், நிர்வாகத்தில். பராமரிப்பில் உள்ளன. மும்பை கேட்வேயிலிருந்து ஒரு மணி நேரம் கடலில் பயணித்து ஒரு மலையடிவாரத்தில் அமைந்துள்ள இந்த குகைகளுக்கு செல்ல 30 வருடங்களாக இயங்கும் ஒரு சிறிய ரயில் செல்கிறது. (1 கிலோ மீ்ட்டர்). இந்திய தொல்லியல் துறை தன் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை நன்கு பராமரித்தாலும், தினமும் பல ஆயிரம் பேர் வரும் இந்த சுற்றுலா தலத்தை, மகாராஷ்டிர அரசு அக்கறை இல்லாதிருப்பது வருந்தத்தக்கது.
நம்மை இன்முகத்துடன் வரவேற்று, உபசரித்து, ஒன்றரை மணி நேரம் பொறுமையாக எலிஃபென்டா குகைகள் குறித்த வரலாற்றை விளக்கிய தொல்லியல் துறை அதிகாரிக்கும், பணியாளர்களுக்கும் நம் அன்பையும், பாராட்டுதல்களையும் தெரிவித்து கொண்டு விடை பெற்று, இந்த இடத்தை மேம்படுத்த என்னால் இயன்ற உதவிகளை செய்வதாக உறுதியளித்து, விரைவு படகில் இருபது நிமிடங்களில் மாலை நேரத்தில் ஒளிமயமாய் ஜொலித்துக் கொண்டிருந்த தாஜ் ஹோட்டலுக்கு எதிரே உள்ள கரையை அடைந்தோம்.
இனிமையான, பழைமையான பாரதத்தின் கலாசார சான்றான எலிஃபென்டா குகைகளின் வரலாறு நம் நினைவுகளை விட்டு இனி விலகாது என்று குறிப்பிட்டுள்ளார்.