வயநாடு நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தியின் சொத்து மதிப்பு விபரம் தற்பொழுது வெளியாகியுள்ளது.நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் இம்மாதம் (ஏப்ரல் )19 ஆம் தேதி தொடங்கி, 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது.
7 கட்டங்களாக நடைபெறும் தேர்தலில்,முதற்கட்டமாக நடைபெறும் தேர்தலில் தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் 1 தொகுதியிலும், தெலுங்கானாவில் 17 தொகுதிகளிலும், ஆந்திராவில் 25 தொகுதிகளிலும் , கேரளாவில் 20 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2-வது கட்டமாக: ஏப்ரல் 26 ஆம் தேதியும், 3-ஆம் கட்டமாக மே 7 ஆம் தேதியும், 4-ஆம் கட்டமாக மே 13 ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, 5-ஆம் கட்ட தேர்தல் மே 20 ஆம் தேதியும், 6 மற்றும் 7-வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு மே 25 மற்றும் ஜூன் 1 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில், கேரளாவில் உள்ள வயநாடு நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் போட்டியிடவுள்ளார். அவரை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் வேட்பாளராக ஆனி ராஜா நிறுத்தப்பட்டுள்ளார்.
இந்நிலையில் ராகுல் காந்தியின் வேட்புமனுவில் வழங்கப்பட்டுள்ள விவரங்களின்படி, பங்குச் சந்தையில் சுமார் 4 கோடியே 30 லட்சம் ரூபாயை அவர் முதலீடு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மியூச்சுவல் ஃபண்டு முதலீடாக 3 கோடியே 81 லட்சம் ரூபாயும், வங்கிக் கணக்கில் 26 லட்சத்து 25 ஆயிரமும் வைத்துள்ளதாக ராகுல் தெரிவித்துள்ளார். இது தவிர ரொக்கமாக 55 ஆயிரம் ரூபாய் கையில் வைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல ராகுல் காந்தியிடம் 9 கோடியே 24 லட்ச ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துகளும், 11 கோடி ரூபாய் மதிப்பில் நிலம் உள்ளிட்ட அசையா சொத்துகளும் உள்ளன. டெல்லியின் மெஹ்ராலி பகுதியில் உள்ள விவசாய நிலம், குருகிராமில் உள்ள அலுவலகம் என அசையா சொத்துகள் இருப்பதாக ராகுல் குறிப்பிட்டுள்ளார். 2019ஆம் ஆண்டில் ராகுலின் மொத்த சொத்து மதிப்பு 15 கோடியே 89 லட்சம் ரூபாயாக இருந்த நிலையில், தற்போது சுமார் 20 கோடியாக அது அதிகரித்துள்ளது.
ராகுல் காந்தியை எதிர்த்து வயநாடு தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் ஆனி ராஜாவுக்கு சுமார் ரூ.72 லட்சம் மதிப்பிலான சொத்துகள் உள்ளதாக அவரது வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.