தமிழ்நாடு தவிர மற்ற மாநிலங்களில் ‘நீட்’ தேர்வுக்கு எதிரான எதிர்ப்புக் குரல்கள் ஒலிப்பதில்லையே என்றும், தமிழ்நாட்டிற்கு மட்டும் ‘நீட்’ விலக்கு சாத்தியமா என்றும் பாஜக உள்ளிட்ட சில எதிர்க்கட்சிகளும் ‘நீட்’ தேர்வுக்கு ஆதரவாக பேசுபவர்களும் கேள்வி எழுப்புகின்றனர். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் போன்றோர் கூட ‘நீட்’ விலக்கு மசோதாவால் என்ன பயன் என்ற ரீதியில் கேள்வி எழுப்பியது நமக்கெல்லாம் தெரிந்த கதைதான்.
ஆனால், இந்த ‘நீட்’ விலக்கு மசோதா மூலம் தமிழ்நாட்டிற்கு ‘நீட்’ தேர்விலிருந்து விலக்கு கொண்டு வர முடியுமா என்றால், அதற்கு ‘ஆம்’ என்பதும், சாத்தியம்தான் என்பதுமே பதில்..!
எப்படி சாத்தியம்..? சில கடந்த கால வரலாறுகளை பார்ப்போம் வாருங்கள்…
நுழைவுத் தேர்வுக்கு எதிரான சட்டம்:
2006-ஆம் ஆண்டில் ஜெயலலிதா ஆட்சியை இழப்பதற்கு முன்பு நுழைவுத் தேர்வு இல்லாமல் தொழிற்கல்வியில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான சட்டம் ஒன்றைக் கொண்டுவந்தார்.
அந்தச் சட்டம் செல்லாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. உயர்நீதிமன்றத் தீர்ப்பில், ‘எந்தவிதமான வல்லுநர் குழுவின் ஆலோசனை இல்லாமல் இயற்றப்பட்ட சட்டம்’ எனக் குறிப்பிட்டிருந்தது. இரண்டாவது, குடியரசுத் தலைவர் ஒப்புதலும் பெறவில்லை எனவும் அந்தத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், ஜெயலலிதாவுக்கு அடுத்து ஆட்சிப் பொறுப்பேற்ற கலைஞர் கருணாநிதி, டாக்டர் எம்.அனந்தகிருஷ்ணன் தலைமையிலான வல்லுநர் குழுவொன்றை நியமித்தார். அந்தக் குழுவுடைய பரிந்துரையின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்ட சட்ட மசோதா, குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்று சென்னை உயர்நீதிமன்றத்துக்கு வந்தது.
2007-ஆம் ஆண்டில் அந்தச் சட்டத்தை ஏற்றுக்கொண்டது உயர்நீதிமன்றம். ஆக, வல்லுநர் குழுவின் தேவை என்பது இதுதான். அந்தக் குழுவின் ஆய்வறிக்கையின் அடிப்படையில் மசோதா தாக்கல் செய்வதுதான் அரசின் மரபு. அதன்படி தான் தற்போது நீதியரசர் ராஜன் தலைமையிலான குழுவின் அறிக்கையின் அடிப்படையில், ‘நீட்’ தேர்வுக்கு எதிரான வலுவான வாதங்களை முன்வைத்து இயற்றப்பட்டுள்ள சட்ட மசோதா, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
ஒருவேளை ஒப்புதல் கிடைக்காத நிலையில் தமிழ்நாடு அரசே நீதிமன்றத்தை அணுகலாம் என்கிறார்கள் கல்வியாளர்கள்.
முன்னுதாரணம் காட்டும் 69% இட ஒதுக்கீட்டு சட்டம்:
16.11.1992 அன்று மண்டல் குழுவின் பரிந்துரைகள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட இந்திரா சகானி வழக்கில் உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியது. அதில், இட ஒதுக்கீட்டின் அளவு 50 விழுக்காட்டைத் தாண்டக் கூடாது என்ற தீர்ப்பானது, தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள மிகவும் போராடிப் பெற்ற உரிமையான 69 % இடஒதுக்கீட்டுக்கு ஆபத்தாக வந்து விடுமோ என்ற நிலை ஏற்பட்டது.
இதனையடுத்து அப்போதைய முதலமைச்சரான ஜெயலலிதா ஆட்சியில், 1993 ஆம் ஆண்டு நவம்பர் 9 ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில், தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்படும் 69 % இடஒதுக்கீட்டு முறை தொடர்வதற்கு, இந்திய அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது.
இந்திரா சஹாணி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பால் பாதிப்பு ஏதும் ஏற்படாத வண்ணம், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு அரசின் தீர்மானம் சட்ட முன்வடிவாக அறிமுகம் செய்யப்பட்டு, 1993 டிசம்பர் 31 அன்று சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
இதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெறப்பட்டு, பின்னர் நாடாளுமன்றத்தில் சட்டத் திருத்தம் கொண்டுவந்து, அரசியலமைப்புச் சட்டம் 31பி, 31சி ஆகிய பிரிவுகளின் அடிப்படையில் 9 ஆவது அட்டவணையில் வரிசை எண் 257 ஏ-வில் சேர்க்கப்பட்டது.
இதன் மூலம் தமிழ்நாட்டில் நீதிக்கட்சி அரசு காலம் தொட்டு நடைமுறையில் இருந்து வரும் சமூக நீதி உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் இருந்து பாதிக்காமல் நடைமுறைக்கு கொண்டுவர வழி வகுக்கப்பட்டது.
ஜல்லிக்கட்டு சட்டமும் வழிகாட்டுகிறது:
2014 ஆம் ஆண்டு, மே மாதம் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டில் நீதித்துறை தடையின் கீழ் இருந்தது. அந்தத் தீர்ப்பின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டதை நீக்க, விலங்குகள் வதை தடுப்புச் சட்டம், 1960 -ல் திருத்தம் தேவைப்பட்டது.
இதனையடுத்து, ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்த சட்டப்பூர்வ பாதுகாப்பு கோரி, மாநில அரசு அவசரச் சட்டத்தை பிறப்பித்தது. இந்த அவசரச் சட்டத்தின் வரைவு, மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு, அதை ஆய்வு செய்து, ஆளுநர் வெளியிட்டதற்கு, குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தார்.
இத்தகைய முன்னுதாரணங்களின் அடிப்படையிலேயே தற்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் தமிழ்நாட்டில் ‘நீட்’ விலக்கைக் கொண்டு வர சட்டப்போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்.
மேற்கூறிய சட்டங்கள் எப்படி சாத்தியமானதோ அப்படியே ‘நீட்’ விலக்கும் சாத்தியமாகும்… ஆட்சி மாறினால் காட்சியும் மாறும் என்பது எல்லோரும் அறிந்ததுதான்!