நெல்லை-சென்னை இடையேயான வந்தே பாரத் ரெயில் சேவையை நாளை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கவுள்ள நிலையில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது
வந்தே பாரத் ரெயில் சேவைக்கான சோதனை ஓட்டம் கடந்த 2 நாட்களாக நடைபெற்ற நிலையில் நேற்று 110 கி.மீ. வேகத்தில் இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
நாளை மதியம் 12.30 மணி அளவில் தனது இயக்கத்தை தொடங்கும் வந்தே பாரத் ரெயில், மதியம் 1.28 மணிக்கு கோவில்பட்டி, மதியம் 2.18 மணிக்கு விருதுநகர், 2.55 மணிக்கு மதுரை, மாலை 4.13 மணிக்கு திண்டுக்கலை தொடர்ந்து திருச்சி சென்றடைகிறது.
இதனைத் தொடர்ந்து விழுப்புரம், தாம்பரம் வழியாக எழும்பூரை சென்றடைகிறது. தொடக்க விழாவையொட்டி ரெயிலை வரவேற்பதற்காக கூடுதல் நிறுத்தங்களில் ரெயில் நிறுத்தப்படுகிறது. நாளை தொடங்க விழா என்பதால், இந்த ரெயிலில் நாளை பயணிகள் யாருக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நெல்லை-சென்னை வந்தே பாரத் ரெயிலுக்கான முன்பதிவு இன்று காலை தொடங்கியது. சென்னையில் இருந்து நெல்லை வருவதற்கு 25-ந்தேதி முதலும், நெல்லையில் இருந்து சென்னை செல்வதற்கு 27-ந் தேதி முதலும் பயணம் செய்வதற்கு முன்பதிவு தொடங்கியது.
இந்நிலையில் இந்த ரெயிலுக்கு சாதாரண ஏ.சி. பெட்டியில் ரூ.1,620 கட்டணமாகவும், எக்சிகியூட்டிவ் ஏ.சி. பெட்டியில் ரூ.3,025 கட்டணமாகவும் வசூலிக்கப்படுகிறது. இவற்றில் சாதாரண ஏ.சி. பெட்டியில் சாப்பாடு இல்லாமல் ரூ.1,320 மற்றும் எக்சிகியூட்டிவ் ஏ.சி. பேட்டியில் சாப்பாடு இல்லாமல் ரூ.2,375 வசூலிக்கப்படுகிறது.
செவ்வாய் தவிர மற்ற 6 நாட்களும் இயக்கப்படும் இந்த ரயில் நெல்லையில் காலை 6 மணிக்கு புறப்பட்டு விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், தாம்பரத்தில் நின்று மதியம் 1.50-க்கு சென்னை எழும்பூர் வந்தடையும். மறுமார்க்கத்தில் எழும்பூரில் பிற்பகல் 2.50-க்கு புறப்பட்டு இரவு 10.40-க்கு நெல்லையை சென்றடையும்.
வந்தே பாரத் என்ற பெயரில் நவீன வசதிகளுடன் கூடிய அதிவிரைவு சொகுசு ரயிலை இந்திய ரயில்வே அறிமுகப்படுத்தி இயக்கி வருகிறது. இதில் ஜிபிஎஸ் டிராக்கர், கேமரா, ஒவ்வொரு இருக்கைக்கும் செல்போன் சார்ஜர், தானியங்கி கதவுகள், குளிர்சாதன வசதி என பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன.
அதிகபட்சமாக மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் இயக்க முடியும் என்பதால், பயண நேரம் குறையும். இதனால், இந்த ரயில்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.