உலகம் முழுவதும் ஒமைக்ரான் வைரஸ் தாக்கம் கணிசமாக அதிகரித்துவருகிறது. பல்வேறு நாடுகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அறிவித்துவருகின்றன. பிரிட்டன், இங்கிலாந்து, நெதர்லாந்து நாடுகளில் ஒமைக்ரான் தொற்று அதிவேகமாக பரவி வருகிறது.
இந்த நிலையில்,நெதர்லாந்து நாட்டில் ஓமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த, இன்று முதல் ஜனவரி 14 வரை ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்து, அந்நாட்டு பிரதமர் மார்க் ரூட்டே உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தற்போது நாட்டில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் நினைத்ததை விட வேகமாக பரவி வருவதாகவும், எனவே நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த உத்தரவு காரணமாக இன்று முதல் ஜனவரி 14 வரை அனைத்து அத்தியாவசியமற்ற கடைகள், உணவகங்கள், பார்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் திரையரங்குகள் மூடப்படும் என்றும், பள்ளிகளும் குறைந்தது ஜனவரி 9 வரை மூடப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்துமஸ் தினத்தைத் தவிர, மற்ற நாட்களில் மக்கள் தங்கள் வீட்டில் விருந்தினர்களை எண்ணிக்கை குறைத்துக்கொள்ள மார்க் ரூட்டே மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.