கேரளா அரசு முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டும் முயற்சியை ஆரம்ப நிலையிலேயே தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளபதிவில்,
“தென்மாவட்ட மக்களின் ஜீவாதாரமான முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டும் முயற்சியை தீவிரப்படுத்தும் கேரளம் – சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் அழுத்தம் கொடுத்து கேரள அரசின் முயற்சியை ஆரம்ப நிலையிலேயே தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.
கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவை காரணம் காட்டி முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டுவதற்கான அனுமதியை வழங்க வேண்டும் என அம்மாநில காங்கிரஸ் எம்.பி திரு. ஹிபி ஏடன் அவர்கள் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க : தமிழ்நாட்டின் பொருளாதாரம் சீர்குலைய ஆரம்பித்துள்ளது – அண்ணாமலை பேட்டி!!
தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து முல்லைப் பெரியாற்றில் புதிய அணையை கட்டுவதற்கான நடவடிக்கையை கேரள அரசு தீவிரப்படுத்தி வரும் நிலையில், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரும் அதே கோரிக்கையை வலியுறுத்தியிருப்பது ஒட்டுமொத்த கேரளமும் புதிய அணையை கட்டுவதில் உறுதியாக இருப்பதை தெளிவு படுத்துகிறது.
முல்லைப் பெரியாறு அணை வலுவாக இருப்பதை அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ளும் மத்தியக் குழுவும், உச்சநீதிமன்றமும் பலமுறை உறுதி செய்த பின்பும், அணை பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக மாயத்தோற்றத்தை உருவாக்கி புதிய அணை கட்டும் முயற்சியில் பிடிவாதம் காட்டும் கேரளத்தின் செயல்பாடுகள் கடும் கண்டனத்திற்குரியது.
மாண்புமிகு இதயதெய்வம் அம்மா அவர்கள் நடத்திய தொடர் சட்டப் போராட்டத்தின் விளைவாக முல்லைப் பெரியாற்றின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவை இதுவரை செயல்படுத்த முன்வராத திமுக அரசால், தற்போது தேனி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்ட மக்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தென்மாவட்ட மக்களின் ஜீவாதாராமாக திகழும் முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டும் கேரளத்தின் முயற்சிக்கு தமிழக முதலமைச்சர் கண்டனம் தெரிவிக்க மறுப்பதும்,
தமிழகத்தில் இருந்து நாடாளுமன்றம் சென்ற 39 உறுப்பினர்கள் மாநில உரிமை பறிபோவதை வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருப்பதும் தென்மாவட்ட மக்கள் மற்றும் விவசாயிகளுக்கு இழைக்கும் மிகப்பெரிய துரோகம் ஆகும்.
எனவே, கூட்டணி தர்மத்தை விட மாநிலமும், மக்களின் நலனுமே முக்கியம் என்பதை இனியாவது உணர்ந்து, சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் உரிய அழுத்தங்களை கொடுத்து முல்லைப் பெரியாற்றில் புதிய அணைகட்டும் கேரளத்தின் முயற்சியை ஆரம்ப நிலையிலேயே தடுத்து நிறுத்த வேண்டும் என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.