டிசம்பர் 2-வது வாரத்தில் அந்தமான் அருகே மீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நடப்பு வருடத்தில் இந்தியா முழுவதும் பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் கொட்டி தீர்த்தது. இதனால், தமிழகம் முழுவதும் நீர் நிலைகள் நிரம்பின. தமிழகத்தில் பல இடங்களில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டது.
தொடர்ந்து, டிசம்பர் மாதத்தில் இயல்பை விட கூடுதலாக மழை பொழிவு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 132%-க்கு மேல் மழை பெய்ய கூடிய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற்று நாளை புயலாக மாறி கரையை கடக்க உள்ளது. இந்நிலையில், அந்தமான் அருகே வங்கக்கடலில் டிசம்பர் 2-வது வாரத்தில் மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் நோக்கி நகரும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுவடைய வாய்ப்பு இல்லை என்றும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழைக்கு மட்டுமே வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.