புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் திறந்து வைப்பதற்க்கு எதிர் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில்,பிரதமர் திறந்து வைப்பாத்தில் எந்த தவறும் இல்லையென ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.அதில்,
இந்திய விடுதலையின் அடையாளமாகவும், ஆட்சி அதிகார மாற்றத்திற்கு அத்தாட்சியாகவும் விளங்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்தச் செங்கோல், மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்களால் 28-05-2023 அன்று திறக்கப்படவுள்ள புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில்,
மக்களவைத் தலைவரின் இருக்கைக்கு அருகில் நிரந்தரமாக இடம் பெறவிருக்கிறது என்பது தமிழ்நாட்டின் பண்பாட்டிற்கும், கலாச்சாரத்திற்கும், தமிழ்ப் பெருங்குடி மக்களுக்கும் மேலும் பெருமை சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது. இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த செங்கோல் புதிய நாடாளுமன்றத்தில் மக்களவைத் தலைவரின் இருக்கையின் அருகில் இடம்பெறவிருப்பது பாராட்டுதலுக்குரியது.
புதிய நாடாளுமன்ற வளாகத்தில் மக்களவைத் தலைவர் அவர்களின் இருக்கைக்கு அருகில் செங்கோல் நிரந்தரமாக இடம்பெறுவது என்பதும், நவீன வசதிகள் கொண்ட புதிய நாடாளுமன்றக் கட்டடம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்களால் திறந்து வைக்கப்படவுள்ளது என்பதும் இரட்டிப்பு மகிழ்ச்சியை அளிக்கிறது.
இதனை சில எதிர்க்கட்சிகள் அரசியலாக்குவது ஏற்புடையதல்ல. மாநிலங்களுக்கான சட்டமன்றப் பேரவைக் கட்டடம், தலைமைச் செயலகம் உள்ளிட்ட மிகப் பெரிய அளவிலான புதிய கட்டடங்கள் எப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில முதலமைச்சர்களால் திறக்கப்படுகிறதோ, அதேபோல் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்கள் திறக்கவிருக்கிறார்கள்.
இதில் தவறேதுமில்லை. இதுதான் பொருத்தமானது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். 2010 ஆம் ஆண்டுதமிழ்நாடு அரசின் சட்டமன்றப் பேரவை மற்றும் தலைமைச் செயலகக் கட்டடம் அப்போதைய இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது என்பதை இந்தத் தருணத்தில் சுட்டிக்காட்டுவது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன். இதுபோன்று பல உதாரணங்கள் பல மாநிலங்களில் உள்ளன.
இதனை அரசியலாக்குவது என்பது ஜனநாயகத்திற்கு எதிரான செயல்.
புதிய நாடாளுமன்ற கட்டடத் திறப்பு விழா சீரோடும், சிறப்போடும் நடைபெற எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதோடு, இந்திய நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில், நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு புதிய நாடாளுமன்ற கட்டடத்தை உருவாக்கி,
தமிழ்நாட்டிற்கும், தமிழக மக்களுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் அதில் செங்கோலை இடம் பெறச் செய்த மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்களுக்கு என்னுடைய பாராட்டினையும், நன்றியினையும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்து உள்ளார்.