புத்தாண்டை (New Year 2024) முன்னிட்டு மெரினாவில் நாளை வாகனங்கள் செல்ல போலீசார் தடை விதித்துள்ளனர். நாளை நள்ளிரவு 12 மணிக்கு பிறக்கப்போகும் 2024-ம் ஆண்டை வரவேற்க உலகமே தயாராகி வருகிறது.
சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு கொண்டாட்டம் மெரினா, பெசன்ட் நகர் உள்ளிட்ட இடங்களில் களைகட்டும். இதனால் ஏராளமான பொதுமக்கள் அங்கு குவிந்து புத்தாண்டை கொண்டாடுவது வழக்கம். கடந்த ஆண்டு மெரினா கடற்கரையில் புத்தாண்டு தினத்தில் ஒரு லட்சம் பேர் திரண்டனர். எனவே, பொதுமக்களின் பாதுகாப்பு கருதி நாளை (31.12.23) மெரினாவில் வாகனங்கள் செல்ல போலீசார் தடை விதித்துள்ளனர்.
கூட்ட நெரிசலை பயன்படுத்தி சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோரை பிடிக்க சிறப்பு படைகள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், நாளை இரவு சென்னை மாநகரில் சுமார் 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மாநகர் முழுவதும் 400 இடங்களில் வாகன சோதனையிலும் போலீசார் ஈடுபட உள்ளனர்.
தமிழகத்திலும் அனைத்து மாவட்டங்களிலும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தமிழகம் முழுவதும் சுமார் ஒரு லட்சம் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
கடற்கரைகளில் கட்டுப்பாடுகள் தீவிரம் :
புத்தாண்டையொட்டி சென்னை மெரினாவில் நாளை (31.12.23) இரவு 8 மணிக்கு மேல் வாகனங்கள் செல்ல தடை சென்னை மாநகர போலீசார் தடை விதித்துள்ளனர். அதேபோல் பைக் ரேஸ் செய்தாலோ, மதுபோதையில் வாகனங்களை இயக்கினாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.
மேலும் ஜனவரி 1 ஆம் தேதி நள்ளிரவு 1 மணிக்கு மேல் ஹோட்டல்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதித்து சென்னை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. மேலும் இதை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.
மேலும், கடற்கரை பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது அசம்பாவித சம்பவங்கள் எதுவும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக மெரினா கடற்கரையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். நாளை மாலையில் இருந்தே கடற்கரை பகுதிகளில் இளைஞர்கள், மக்கள் அதிகளவில் கூடுவர். எனவே, நாளை கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அசம்பாவிதம் நடக்காமல் இருக்க, தேவையான முன்னேற்பாடுகளையும் எடுத்து வருகின்றனர்.
கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பண்ணை வீடுகள் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றன.
இதையும் படிங்க : https://itamiltv.com/the-electricity-board-should-abandon-the-scheme-of-selecting-employees-on-lease-basis-anbumani-ramadoss-political/
மேலும், நாளை இரவு மெரினாவில் தற்காலிக புற காவல் நிலையங்களை அமைத்தும் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதற்காக, போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின்பேரில் கூடுதல் கமிஷனர்கள் பிரேம் ஆனந்த் சின்கா, அஸ்ரா கார்க் சுதாகர் மற்றும் இணை கமிஷனர் தர்மராஜ் ஆகியோரின் மேற்பார்வையில் புத்தாண்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தயாராகி வருகின்றன.
கடற்கரையில் சுமார் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து பைனாகுலர் மூலமாக காவல்துறையினர் அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமலிருக்க கண்காணிக்க உள்ளனர். அதுமட்டுமல்லாமல் கூட்ட நெரிசலில் குழந்தைகள் காணாமல் போய்விட்டால் அவர்களை கண்டுபிடிப்பதற்காக குழந்தைகளின் கைகளில் அடையாள வளையம் ஒன்றும் கட்டப்படுகிறது.
அந்த அடையாள வளையத்தில் பெற்றோர்கள் மற்றும் காவல் துறையினரின் உதவி எண்கள் இடம் பெற்று இருக்கும். இதன் மூலம் காணாமல் போய் தவிக்கும் குழந்தைகளை உடனடியாக மீட்க முடியும் என்பதால் இந்த நடைமுறையை கடந்த சில ஆண்டுகளாகவே சென்னை போலீசார் பின்பற்றி வருகிறார்கள்.