நெல்லைமாவட்டம் வேம்பையாபுரம் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்திய சிறுத்தை, பிடிபட்ட நிலையில் மணிமுத்தாறு வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது.

நெல்லை மாவட்டத்தில் மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தை ஒட்டி அமைந்துள்ள பாபநாசம், விக்கிரமசிங்கபுரம், அம்பாசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் அவ்வப்போது வனவிலங்குகளின் நடமாட்டம் பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது.
இந்த நிலையில், பாபநாசம், வேம்பையாபுரத்தைச் சேர்த சங்கர் என்பவரின் வீட்டில் இருந்த ஆடு வியாழக்கிழமை மாயமானது. வனப்பகுதியில் இருந்து வந்த சிறுத்தை ஆட்டை தூக்கிச் சென்றதாக பரபரப்பு கிளம்பியது. ஆட்டை அடித்துச் சென்ற சிறுத்தை, வெகுதூரத்தில் பாதி உடலை குதறிப் போட்டுவிட்டு சென்றது.
இதையும் படிங்க: தாயின் கண் முன் வெட்டி சாய்க்கப்பட்ட மகன் – நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்
அதே போல், பாபநாசம், அனவன்குடியிருப்பைச் சேர்ந்த பேச்சிமுத்து என்பவரது வீட்டில் இருந்த ஆட்டையும் சிறுத்தை தாக்கியது.
இதுகுறித்த புகார்களின் பேரில், பாபநாசம் வனச்சரகர் சத்தியவேல் தலைமையிலான வனத்துறையினர் சிறுத்தைகளைப் பிடிக்க தீவிரம் காட்டி வந்தனர்.
ஆடுகள் மாயமான இரண்டு இடங்களிலும், சிறுத்தையின் நடமாட்டத்தை மோப்பநாய் நெஸ் மூலமாக கண்டறியும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர்.
அப்போது அனவன் குடியிருப்பு பகுதியில் மோப்பம் பிடித்தபடி சென்ற நெஸ், அங்குள்ள பொத்தையைச் சென்றடைந்தது.
இதனைத் தொடர்ந்து, வனத்துறையினர் அந்தப் பகுதியில் கூண்டு வைத்து சிறுத்தையைப் பிடிக்க திட்டமிட்டனர்.
அதே போன்று கூண்டு வைத்ததோடு, வனத்துறை இணை இயக்குநர் இளையராஜா, வனச்சரகர் சத்தியவேல் தலைமையில் வனக்குழுவினர் அங்கு முகாமிட்டனர்.
இதையும் படிங்க: 5ம் கட்ட தேர்தல் – இன்று மாலையுடன் ஓய்கிறது பிரசாரம்!
இந்த நிலையில் இன்று (மே18) அதிகாலையில், வனத்துறையினர் வைத்த கூண்டில் சிறுத்தை ஒன்று சிக்கியது.
அது பெண் சிறுத்தை என்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர். இதையடுத்து பிடிபட்ட சிறுத்தையை, பாதுகாப்புடன் கொண்டு சென்று மணிமுத்தாறு வனப்பகுதியில் விடுவித்தனர்.
ஆடுகளை கடித்துக் குதறி மனிதர்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை பிடிபட்டுள்ளதால், அப்பகுதி மக்கள் தற்போது நிம்மதி அடைந்துள்ளனர்.