ராமநாதபுரம் மாவட்டத்தில் பரிதாபம் காட்டிய மூதாட்டியை மயக்கமடைய வைத்து நகை, பணத்தை லபக்கிய பெண்ணுக்கு போலீசார் காப்பு மாட்டியிருக்கிறார்கள்.

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அக்ரஹாரம் தெருவைச் சேர்ந்த 68வயது மூதாட்டி வசந்தத்துக்கு அன்றைய நாள் வசந்தமாக விடியவில்லை.
தூக்கத்தில் இருந்து கண்விழித்த அவர் கழுத்தில், காதில் அணிந்திருந்த தங்க நகைகள் இல்லாததால் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.
வீட்டில் இருந்த பணம், செல்போன் ஆகியவையும் காணாமல் போக மயக்க நிலைக்குப் போனவர் சுதாரித்துக் கொண்டுள்ளார்.
பின்னர் வாயிலும், வயிற்றிலும் அடித்தபடி தொண்டி காவல்நிலையத்துக்கு நடந்து வந்த மூதாட்டியை போலீசார் ஆசுவாசப்படுத்தியிருக்கிறார்கள்.
என்ன நடந்தது என்று கேட்டதும் கண்ணீருடன் நடந்ததைச் சொல்லி இருக்கிறார் மூதாட்டி வசந்தம்.
பூ வியாபாரம் செய்யும் வசந்த்திடம், உப்பூர் அருகே உள்ள நாகனேந்தலைச் சேர்ந்த 48வயது சிவகாமி, அடிக்கடி பூவாங்கி வந்துள்ளார்.
வாடிக்கையாளராக வந்த சிவகாமிக்கும் வசந்தத்துக்கும் ஒருகட்டத்தில் பலமான நட்பு உருவாகி உள்ளது.
இந்த நட்பின் அடிப்படையில், அடிக்கடி மூதாட்டி வசந்தம் வீட்டுக்கு சிவகாமியும் வந்துவிட்டு செல்வாராம்.
இந்த நிலையில் வியாழக்கிழமை திடீரென மூதாட்டியின் வீட்டுக்கு வந்த சிவகாமி, வேலை தொடர்பாக வந்ததாகவும், இரவில் வீட்டில் தங்கலாமா என்றும் கேட்டுள்ளார்.

பழகிய பெண்தானே என்னும் நம்பிக்கையிலும், இரவு நேரமாயிற்றே என்னும் பரிதாபத்திலும் சிவகாமியை வீட்டில் தங்க வைத்துள்ளார்.
அப்போது இரவு, தான் டீ போட்டுத்தருவதாகக் கூறி சிவகாமி டீ போட்டு கொடுக்க, இருவரும் குடித்துவிட்டு உறங்கி உள்ளனர்.
மறுநாள் காலை கண்விழித்தபோது வசந்தம் அணிந்திருந்த 11.5 பவுன் தாலி சங்கிலி, 6 பவுன் தங்க வளையல், 5 கிராம் தங்க மோதிரம், செல்போன், ரூ. 1,420 ஆகியவை மாயமாகி இருந்தது.
அருகில் இருந்த சிவகாமியையும் காணாததால் அவர்தான் திருடிச் சென்றிருப்பார் என்ற முடிவுக்கு மூதாட்டி வந்திருக்கிறார்…
இப்படி தனது நகைகள், பணம் திருடு போனது குறித்து மூதாட்டி சொல்ல போலீசார் அதனைப் புகாராக எழுதி வாங்கிக் கொண்டனர்.
பின்னர் வழக்கு பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து திருடியதில், மூதாட்டியிடம் நகை, பணத்தை திருடிச் சென்ற சிவகாமி சிக்கிக் கொண்டார்.
முதற்கட்ட விசாரணையில், மூதாட்டிக்கு தேநீர் போட்டுக் கொடுத்தபோது அதில் மயக்க மருந்தை கலந்து கொடுத்து திருடியது தெரியவந்தது.

இதனையடுத்து சிவகாமியை கைது செய்த போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.
பழகிய தோஷம், இரவு நேரம் என பரிதாபப்பட்ட மூதாட்டியை மயக்கி நகையை திருடிச் சென்ற இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.