செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள நியாய விலை கடையில் விநியோகிக்கப்படும் அரிசியில் பிளாஸ்டிக் அரிசி(plastic rice) கலந்திருப்பதாக பெண் ஒருவர் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த சில நாட்களாக ரேஷன் கடைகளில் விநியோகிக்கப்படும் ரேஷன் அரிசிகளில் பிளாஸ்டிக் அரிசிplastic rice கலந்து இருப்பதாக ஒரு சிலர் தகவல்களை பரப்பி வருகின்றனர்.
அந்த வகையில் ,செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் உள்ள, நியாய விலை கடையில் அரசு விநியோகிக்கப்படும் அரிசி,பருப்பு, உள்ளிட்ட பொருள்களை பெண் ஒருவர் வாங்கியுள்ளார்.

இதனை தொடர்ந்து ரேஷன் கடைகளில் வழங்கிய அரிசியை தண்ணீர் ஊறப்போடும் போது தனிதனியாக அரிசிகள் மிதக்கிறது எனவும், அந்த அரிசியை பாத்திரத்தில் வைத்து வறுத்தால், கருகி விடுவதாகவும் குற்றச்சாட்டை முன் வைத்து வீடியோ ஒன்றை பதிவு செய்திருக்கிறார்.
இந்த வீடியோ சமூக வலைதளத்தில் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு உள்ளூர் குழுக்களில் மிக வேகமாக பரவி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு வாயிலாக, ரத்தசோகை நோயை கட்டுப்படுத்த செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படுவதால் அரிசிகள் பிளாஸ்டிக் போன்று காட்சி அளிப்பதாகவும் அதனால் பொது மக்கள் அச்சப்பட வேண்டாம் எனவும் தெரிவித்திருந்தார்.