கிரிக்கெட் போட்டிகளில் விதிகள் மாற்றத்தால் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜோய்சா நுவன் தாரங்கா தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரத்தைச் சேர்ந்த முன்னாள் , இந்நாள் கிரிக்கெட் வீரர்களுக்கு நண்பர்கள் ‘ஹெல்ப்பிங் ஹேண்ட்ஸ் டிரஸ்ட்’ சார்பில் விருது வழங்கும் விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு நண்பர்கள் ஹெல்ப்பிங் ஹேண்ட்ஸ் டிரஸ்ட் சேர்மன் ரமேஷ் கண்ணன் தலைமை வகித்தார்.
ராமநாதபுரம் கிரிக்கெட் அசோசியேஷன் மாவட்ட தலைவர் பரூக் அப்துல்லா முன்னிலை வகித்தார். ராமநாதபுரம் கிரிக்கெட் அசோசியேஷன் மாவட்ட செயலாளர் மாரீஸ்வரன், மாற்றுத்திறன் கிரிக்கெட் வீரர் சச்சின் சிவா ஆகியோர் பேசினர்.
முன்னாள் ஆல்ரவுண்டர் மாரீஸ்வரன், சத்தியேந்திரன், மகேந்திரன் உள்பட 50க்கும் மேற்பட்ட வீரர்களுக்கு இலங்கை கிரிக்கெட் முன்னாள் வீரர் ஜோய்சா நுவன் தாரங்கா, இலங்கை வீரர் சீக்குகெ பிரசன்னா, மாற்றுத்திறன் கிரிக்கெட் வீரர் வீரக்கோடி தனுஷ்க ஜீவக்க, பிங்கார சர்வதேச கிரிக்கெட் கிளப் பயிற்றுநர் காமகே அசெல பெரேரா ஆகியோர் விருது வழங்கினர். கிரிக்கெட் போட்டிகளின் தேசிய நடுவர் கண்ணதாசன் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார். நிறைவில் டயுள்யு சி ஏ கிரிக்கெட் அகாடமி நிர்வாகி வாஹித் நன்றி கூறினார்.
இதன்பின்னர், இலங்கை கிரிக்கெட் முன்னாள் வீரர் ஜோய்சா நுவன் தாரங்கா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, கிரிக்கெட் விளையாட்டு மீது ஆர்வத்தை ஏற்படுத்தவும், போட்டிகளை காண வரும் ரசிகர்களை உற்சாகப்படுத்தவும் கிரிக்கெட் விளையாட்டில் சர்வதேச கிரிக்கெட் கிளப், மெல்போர்ன் கிரிக்கெட் கிளப் பல்வேறு விதிகளை மாற்றியுள்ளது.
மேலும், வேகப்பந்து வீச்சு மூலம் அதிக ரன் விட்டுக்கொடுப்பது வருத்தமாக தான் உள்ளது. மட்டையாளர்களும் ரன் குவிப்பதில் கருணை காட்டுவதில்லை. 2004- 2005 ஆண்டுகளில் விதிகள் பந்து வீச்சாளர்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியது. தற்போது டி – 20 போட்டிகளிலும் விதிகள் மாற்றப்பட்டுள்ளதும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என தெரிவித்தார்.