மக்களவை தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி தமிழகம், புதுவையில் மகத்துவமான வெற்றி பெறும் என்று முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவர் கருணாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
18வது மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு, நடிகர் கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பு ஆதரவு தெரிவித்தது.
திமுக மற்றும் கூட்டணியினருக்காக முக்குலத்தோர் புலிப்படை சார்பில் தேர்தல் பிரசாரத்திலும் ஈடுபட்டனர்
ஏப்ரல் 19ல் தமிழகத்தில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த நிலையில், இன்று (வியாழக்கிழமை) முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் நிறுவனர் நடிகர் கருணாஸ், திமுக தலைவர் முதலமைச்சர் ஸ்டாலினை, அண்ணா அறிவாலயத்தில் வைத்து சந்தித்தார்.
இதன்பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, ஸ்டாலின் ஆதரிக்கக்கூடிய இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக தென் மாவட்டங்கள், கோவை உள்ளிட்ட இடங்களில் பிரசாரம் செய்ததாகத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:பிரிவினைவாதம் தூண்டுகிறார் நரேந்திரமோடி ; பிரசாரத்துக்கு தடை கோரும் காங்கிரஸ்
40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி மிகப்பெரிய மகத்துவமான வெற்றி பெறும் என்பதில் நம்பிக்கை இருப்பதாகவும்,
மக்களின் ஆதரவும் அதனை நோக்கியே இருந்தது என்றும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது: –
இந்தியா கூட்டணிக்கு உழைக்கும் வாய்ப்பை முக்குலத்தோர் புலிப்படைக்கு வழங்கிய முதலமைச்சர் ஸ்டாலினை பார்த்து, வாழ்த்து பெற்றோம்.
சாதி ரீதியான கணக்கீடு, இட ஒதுகீடு, மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயர் வைப்பது,
1995ல் முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்ட கள்ளர் மறவர் அகமுடையோர் என்னும் அரசாணையை நடைமுறைப்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கையை வைத்துள்ளோம்
மத்தியில் ஒன்றிய அரசின் ஆட்சி மாற்றத்துக்கு பின்னர் இந்தியா கூட்டணி ஆட்சியில் இந்த கோரிக்கைகள் அனைத்தும் பரீசிலிக்கப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளதில் எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது.
கடந்த 10 ஆண்டு காலமாக மதத்தை மட்டுமே மையப்படுத்தி ஆட்சியில் இருந்தது பா.ஜ.க.
ஓரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே தேர்தல், ஒரே ரேசன்கார்டு என்று ஜனநாயகத்துக்கு புறம்பாக, இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக செயல்பட்டு கொண்டிருக்கிற பா.ஜ.க அரசு வீழ்த்தப்பட வேண்டும்.
அதில் எல்லோரையும் போல் நானும் உறுதியாக இருந்தேன்.
தமிழக முதல்வர் ஸ்டாலினும் அதனை நோக்கிப் பயணித்ததன் காரணமாக அவருடன் இணைந்து தேர்தல் பிரசார பயணத்தில் ஈடுபட்டோம்.
நிச்சயமாக ஆட்சிமாற்றம் ஏற்படும் என்றும் நம்புகிறேன். வரக்கூடிய காலகட்டம் என்பது அந்தந்த சூழல்களுக்கு ஏற்ப முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.