ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்குட்பட்ட பெரியார் நகர் பகுதியில் திமுக, அதிமுகவினர் இடையே இன்று கடும் மோதல் ஏற்பட்டதை அடுத்து போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் இன்று ஓட்டுப்பதிவு நடந்து வருகிறது. பெரியார் நகர் பகுதியில் 7 வாக்குச்சாவடிகள் அடுத்தடுத்து உள்ளன. திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டுள்ளார்.
அதிமுக சார்பில் தென்னரசு களமிறங்கி உள்ளார்.
இந்த வாக்குச்சாவடியில் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக திமுகவினரும், தென்னரசுக்கு ஆதரவாக அதிமுகவினரும் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்து வந்தனர்.
அப்போது இருகட்சியினரும் எதிரெதிரே அமர்ந்து பொதுமக்களிடம் ஆதரவு கோரினர். அப்போது சாதியை சொல்லி பேசியுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் இருகட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் உருவானது.
இதையடுத்து அங்கிருந்த போலீசார் உடனடியாக விரைந்து வந்து இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து பிரச்சனை முடிவுக்கு வந்தது. இருப்பினும் அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.
இதையடுத்து போலீசார் வாக்குச்சாவடி மையங்களுக்கு வெளியே அமர்ந்துள்ள திமுகவினர், அதிமுகவினருக்கு மாற்று இடம் ஒதுக்கினர். தற்போது புதிய இடத்தில் அவர்கள் அமர்ந்து பொதுமக்களிடம் ஆதரவு கோரி வருகின்றனர்.
மேலும் அங்கு பதற்றம் நிலவி வருவதால் போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.இந்த பரபரப்பிற்கு மத்தியில் இன்று காலை முதல் ஈரோடு கிழக்கு தொகுதியில் மக்கள் ஆர்வமாக வந்து ஓட்டளித்து வருகின்றனர்.