இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சிஆா்பிசி), இந்திய சாட்சியங்கள் சட்டம் (ஐஇசி) நிறைவேற்றப்பட்டு தற்போது வரை நடைமுறையில் உள்ளது
இந்த நிலையில் , இந்த சட்டங்களுக்கு மாற்றாக ஆளும் மத்திய அரசு பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்), பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (பிஎன்எஸ்எஸ்), பாரதிய சாட்சிய அதினியம் ஆகிய 3 புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த சட்டங்களின் சிறப்பம்சங்கள் குறித்து இந்த பதிவில் காணலாம்.
- இந்த சட்டங்களின்படி, புகார் கொடுத்தவர்கள் மற்றும் புகாரால் பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறையிடம் இருந்து முதல் தகவல் அறிக்கையின் (எஃப்ஐஆர்) நகலை பெற்றுக்கொள்ள முடியும்.
- ஒரு நபர் ஏதேனும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டால் உடனடியாக அவருக்கு தெரிந்தவர்களுக்கு தனது நிலையை தெரிவிக்க புதிய சட்டங்களில் வழிவகை உண்டு.
இதையும் படிங்க: நீதி நிர்வாகத்தை சீர்குலைக்கும் சட்டங்கள்!-ப.சிதம்பரம் விமர்சனம்!
- பாதிக்கப்பட்டவர்களுக்கு தாமதிக்கப்படாமல் உடனடியாக நீதி கிடைக்கும் வகையில், அந்தந்த எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் மட்டுமின்றி எந்த ஒரு காவல் நிலையத்திலும் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க முடியும்.
- மேலும் காவல் நிலையங்களுக்கு செல்லாமல் வீட்டில் இருந்து ஆன்லைன் மூலம் புகார் அளிக்கலாம்.
- கொடூரமான, மிகப்பெரிய குற்ற வழக்குகளில் சாட்சியங்கள் கலைக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய குற்றச்சம்பவம் நடந்த இடத்தை காவல்துறையினர் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
- ஆன்லைனில் புகார் பதிவு செய்தல் மற்றும் ஆன்லைன் மூலம் சம்மன் அனுப்புதல் என அனைத்து நடைமுறைகளும் கணினிமயமாக்கப்பட்டுள்ளன.
- பெண்கள், குழந்தைகள் தொடர்பான முக்கிய வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களிடம் இனி பெண் மாஜிஸ்திரேட்டுகள்தான் வாக்குமூலம் பெற முடியும்,
- கிரிமினல் வழக்குகளில் விரைவாக நீதி வழங்குவதை உறுதி செய்யும் வகையில் விசாரணை முடிந்த 45 நாட்களுக்குள் தீர்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். நீதிமன்றத்தில் முதல் விசாரணை முடிந்த 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும்.
- பயங்கரவாத குற்றங்கள் இனி ராஜ துரோகம் என்பதற்கு பதிலாக தேசத் துரோகம் என வரையறுக்கப்படும்.
- சிறுமிகள் பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை கிடைக்க புதிய சட்டங்கள் வழிவகை செய்கின்றன.