போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக், 40 கோடி ரூபாய் வரை ஹவாலா பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.
தி.மு.க., அயலகப் பிரிவைச் சேர்ந்த முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதாகி, டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து, கைப்பற்றப்பட்ட எட்டு மொபைல் போன்கள் மூலம், ஜாபர் சாதிக்கின் நெட்வொர்க் குறித்து போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் துப்பு துலக்கி வருகின்றனர்.

இதையும் படிங்க: போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்..!!!
அதே ஜாபர் சாதிக் மற்றும் அவரது கூட்டாளிகள் சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டது தொடர்பாக, அமலாக்கத்துறை அதிகாரிகளும் விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக, ஜாபர் சாதிக்கோடு நெருங்கிய தொடர்பில் இருந்த திரைப்பட இயக்குனர் அமீர் உள்ளிட்டோரின் வீடு, அலுவலகங்களில் வருமானவரி சோதனையிலும் ஈடுபட்டனர்.

இந்த சோதனையின்போது, போதைப்பொருள் கடத்தல் வாயிலாக சம்பாதித்த பணத்தில், 40 கோடி ரூபாயை சினிமா படம் தயாரிப்பதற்காக, ஜாபர் சாதிக் சட்ட விரோதமாக முதலீடு செய்ததற்கான ஆவணங்கள் சிக்கின.

இதையும் படிங்க: போதைப்பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் ஓட்டலில் அமலாக்கத்துறை சோதனை..!!!
இதையடுத்து, ஜாபர் சாதிக்குடன் மிக நெருக்கமாக இருந்த சென்னை மண்ணடியைச் சேர்ந்த, ஹவாலா முக்கிய புள்ளி ஒருவரை, அமலாக்கத் துறை அதிகாரிகள் தங்களின் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணையில், ஜாபர் சாதிக், 40 கோடி ரூபாய் வரை ஹவாலா பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது. தொடர்ந்து அவரிடம் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.