தமிழ்நாட்டின் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்ற சர்ச்சை பேச்சுக்கு, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கண்டனம் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த ஆண்டு 2023 செப்டம்பர் 2-ம் தேதி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் சனாதன ஒழிப்பு மாநாடு’ சென்னையில் நடத்தப்பட்டது.
அந்த மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “இந்த மாநாட்டின் தலைப்பே மிகவும் சிறப்பாக அமைந்திருக்கிறது.
சனாதன எதிர்ப்பு மாநாடு’ என்று போடாமல், `சனாதன ஒழிப்பு மாநாடு’ என்று போட்டிருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய வாழ்த்துகள். சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது.
கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா ஆகியவற்றையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம்’” என்று பேசி இருந்தார்.
இதையும் படிங்க: சனாதன சர்ச்சைப் பேச்சு : உதயநிதி மீது..உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு!
அவரது பேச்சு கடும் சர்ச்சையைக் ஏற்படுத்தியது. மேலும் பாஜக மற்றும் இந்து அமைப்புகளிடையே உதயநிதி பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
மேலும், மகாராஷ்டிரா, பீகார் , ராஜஸ்தான், உ.பி. மற்றும் காஷ்மீர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
இப்படி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் அமைச்சர் உதயநிதிக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், “இந்த வழக்குகள் அனைத்தையும் ரத்து செய்துவிட்டு ஒரே வழக்காக மாற்றி விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்” எனக்கூறி உதயநிதி
ஸ்டாலின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. தற்போதுவரை, இவ்வழக்குகள் குறித்த விசாரணையும் தொடர்ந்து நடைபெற்று கொண்டுள்ளது.
இதையும் படிங்க: மீண்டும் மீண்டும் சனாதன தர்மத்தை அவமதித்த ராசா.. -கொந்தளித்த அண்ணாமலை!
இந்நிலையில், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்திருக்கும் சமீபத்திய பேட்டியில், தமிழ்நாடு அமைச்சர் உதயநிதியின் சனாதனம் குறித்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் அளித்த நேர்காணலில் “தெலங்கானா மாநிலத் தலைவர் மற்றும் முதல்வர் என்ற முறையில் அமைச்சர் உதயநிதியின் சனாதனம் குறித்த கருத்து தவறு என்று நான் கூறுகிறேன். அதற்கு நிச்சயம் அவர் பொறுப்பேற்க வேண்டும்.
அது அவருடைய சிந்தனையாக இருக்கலாம். ஆனால் சனாதனம் குறித்த கருத்திற்காக அவர் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும். வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே இந்திய நாடு.
ஆகவே, மத உணர்வுகளை மதித்து, அதற்கு தீங்குவிளைவிக்காமல் அனைவரின் நம்பிக்கைகளையும் நிலைநிறுத்துவதே முக்கியம்” என்று தெரிவித்துள்ளார்.