மாநிலங்களவை எம்.பி. பதவி வாங்கித் தருவதாக சமூகசேவகரிடம் ரூ2.25கோடியை ஏமாற்றிய இருவரைப் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
டெல்லியின் ஆத்சினி (Adchini) பகுதியில் உள்ள திருமண அரங்கு ஒன்றில் இருவரிடையே தகராறு நிலவுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
விரைந்து சென்ற போலீசார் இருவரையும் பிடித்து விசாரித்தனர்.
அவர்களில் ஒருவர் சமூக சேவகர் நரேந்திர சிங், மற்றவர் நவீன்குமார் என்பதும், ஜனாதிபதி பெயரைச் சொல்லி நவீன்குமார் நரேந்திரசிங்கை மோசடி செய்ததும் தெரியவந்தது.
டெல்லி கிஷன்கார் பகுதியைச் சேர்ந்தவர்தான் 63வயதான நரேந்திரசிங். ச
மூக சேவகரான இவர் அந்தப் பகுதியில் பிரபல்யமானவர்.
அங்குள்ள கோயில் ஒன்றில் பூசாரியாக இருப்பவர் நானக்தாஸ்.
சமூக சேவர் நரேந்திர சிங்கிடம், அவரது சமூகசேவை அடிப்படையில் மாநிலங்களவையில் நியமன எம்.பி. பதவி கிடைக்க வாய்ப்புள்ளதாக பூசாரி நானக்தாஸ் கூறி வந்துள்ளார்.
இதையும் படிங்க: தோல் நிறத்தை வைத்து பேசுவதை பொறுக்க முடியாது – பிரதமர் மோடி கண்டனம்
இதனால் தானும் எம்.பி. ஆக வேண்டும் என்று சபலப்பட்ட சமூக சேவகரிடம், ஜனாதிபதி மாளிகையில் பணியாற்றுபவர் என்று கூறி நவீன்குமாரை, நானக்தாஸ் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
இதன்பின்னர் மூவரும் அரசு அலுவலகங்கள், தனியார் குடியிருப்பு பகுதிகளில் அடிக்கடி சந்தித்துள்ளனர்.
அப்போது, ஜனாதிபதியுடனேயே தான் இருப்பதாகவும், அவரிடம் சொல்லி நியமன எம்.பி. பதவியை வாங்கித் தருவதாகவும் நவீன்குமார் ஆசை காட்டி இருக்கிறார்.
அதுமட்டும் இல்லாமல், நரேந்திரசிங்கின் பிறந்தநாளுக்கு ஜனாதிபதியே வாழ்த்து செய்தி வழங்கியதுபோல அவரது கையெழுத்துடன் கூடிய கடிதம் ஒன்றையும் கொடுத்துள்ளார்.
இதனால் நரேந்திரசிங் மிகுந்த நம்பிக்கையுடன் நவீன்குமாரிடம் நெருக்கம் காட்டியபோது, நியமன எம்.பி. பதவியை பெற 5கோடி ரூபாய் செலவாகும் என்றும் கூறியிருக்கிறார்.
இதனை நம்பிய நரேந்திரசிங் முதல்கட்டமாக கடந்த ஆகஸ்ட் மாதம் ரூ.2..25கோடியை தந்துள்ளார்.
அதன்பின்னர் சில நாட்களாக இருவரையும் சந்திக்கவும், தொடர்பு கொள்ளவும் முடியவில்லை.
இதனால் இருவரும் சேர்ந்து தன்னை ஏமாற்றியதை அறிந்துள்ளார் நரேந்திரசிங்.
ஆனாலும், வெளியில் சொல்ல அவமானப்பட்டவர், எப்படியும் தனது பணத்தை மீட்கவும், இருவரையும் போலீசில் பிடித்துக் கொடுக்கவும் முயற்சி செய்துள்ளார்.
இதன்பின்னர் பல்வேறு வழிகளில் முயன்று மீண்டும் இருவரிடமும் செல்போனில் தொடர்பு ஏற்படுத்தி உள்ளார்.
தான் ஏமாந்ததை காட்டிக் கொள்ளாதவராக மீதிப் பணத்தை எப்போது தருவது என்று தூண்டில் வீசியுள்ளார்.
அப்போது ஆத்சினி பகுதியில் உள்ள திருமணமாளிகைக்கு வருமாறு நவீன்குமார் கூறியுள்ளார்.
அப்படி அங்கு வந்து நவீன்குமாரை, நரேந்திரசிங் மடக்கிப் பிடித்தபோதுதான் போலீசிடம் சிக்கியது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து சமூக சேவகரிடம் புகார் பெற்ற போலீசார், நவீன்குமாரை பிடித்து விசாரித்தனர்.
அப்போது அவர் ஜனாதிபதி மாளிகையில் வேலை செய்யவில்லை என்னும் அதிர்ச்சி தகவல் கிடைத்தது.
நானக்தாஸும், நவீன்குமாரும் சேர்ந்து சமூகசேவகரை ஏமாற்றி உள்ளனர்.
இதற்காக ஜனாதிபதி வழங்கியதாக மோசடி கடிதத்தையும் தயாரித்துள்ளனர்.
நரேந்திரசிங் கொடுத்த பணத்தை இருவரும் பங்குபோட்டுக் கொண்டதும் விசாரணையில் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து நவீன்குமாரை கைது செய்த போலீசார்,
அவரது தகவலின் பேரில் நானக்தாஸையும் கண்டுபிடித்து விசாரித்து வருகின்றனர்.
நியமன எம்.பி. பதவி வாங்கித் தருவதாக சமூக சேவகரிடம் மோசடி செய்த சம்பவம் பரபரப்பாகப் பேசப்படுகிறது.