நுதன முறைகளில் விதவிதமாக ஆன்லைன் மோசடிகள் அரங்கேறி வரும் நிலையில், மக்கள் விழிப்புடன் இருக்க சைபர் க்ரைம் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையனின் மனைவி மருத்துவர் சரோஜா, மோசடி கும்பல் ஒன்று தன்னிடம் பணம் பறிக்க முயன்றதாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
மே 10ஆம் தேதி, மருத்துவர் சரோஜாவை, தொலைத்தொடர்பு சேவை நிறுவனத்தில் இருந்து பேசுவதாக, மர்ம நபர் ஒருவர் செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில், சட்டவிரோத செயலில் ஈடுபட்ட நபர் ஒருவர், சரோஜாவின் ஆதார் கார்டை வைத்து சிம்கார்டு வாங்கியதாகத் தெரிவித்துள்ளார்.
உங்கள் மொபைல் போனை முடக்க இந்தூர் போலீசார் பரிந்துரை செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
தொடர்ந்து இந்தூர் சைபர் க்ரைம் போலீசாரிடம் உடனடியாகப் பேசும்படி அதற்கான எண்களையும் அனுப்பி உள்ளார்.
அந்த எண்ணை தொடர்பு கொண்டபோது, சரோஜாவின் ஆதார் அட்டையை பயன்படுத்தி மும்பை தனியார் வங்கி மேலாளர் சஞ்சய்சிங் சிம்கார்டு வாங்கி,
அதனைப் பயன்படுத்தி சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்ததாக தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக வீடியோ காலில் அழைப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து சுனில்குமார் என்பவரின் எண்ணில் இருந்து சரோஜாவின் வாட்ஸ் அப்புக்கு அரசு முத்திரையுடன் கூடிய கைது வாரண்டும், சொத்து முடக்க ஆவணம் என சில ஆவணங்களை அனுப்பி உள்ளனர்.
மேலும், சரோஜாவிடம் நீங்கள் நிரபராதி என்பவதால் உதவுவதாகக் கூறி பணம் பறிக்க முயன்றவர்கள் வங்கிக் கணக்கு விவரங்களைக் கேட்டுள்ளனர்.
இதனால் செல்போன் தொடர்பை துண்டித்ததாகவும் புகார் மனுவில் கூறியுள்ளார்.
தனது ஆதார் அட்டையைப் போலியாக தயாரித்து, குற்றச் செயல்களில் ஈடுபடும் மர்மநபர்களை கைது செய்ய வேண்டும் என்றும் புகார் மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த புகார் மனு மீது சைபர் க்ரைம் போலீசார் நடவடிக்கைக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
போலி ஆதார் கார்டு, சிம் கார்டு, சட்டவிரோத பணப்பரிமாற்றம் என்று முன்னாள் அமைச்சரின் மனைவியிடமே மர்ம நபர்களின் மிரட்டல் புகார் ஒரு பக்கம் வெளியாகி இருக்க,
ஆன்லைன் வர்த்தகம் என்று ஆவடி பகுதியில் சுங்கத்துறை ஊழியரிடம் பெண் ஒருவர் கோடிகளில் ஏமாற்றியிருப்பதும் அம்பலமாகி உள்ளது.
ஆவடி, மாங்காடு பகுதியைச் சேர்ந்த சுங்கத்துறை ஊழியர் மனோரஞ்சன் குமாருக்கு முகநூல் வாயிலாக அதிதி என்னும் பெண் அறிமுகம் ஆகி உள்ளார்.
அப்போது பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் வருவதோடு குறுகிய காலத்திலேயே கோடீஸ்வரர் ஆகிவிடலாம் என்றும் ஆசை காட்டியிருக்கிறார்.
இதற்கு மனோரஞ்சன் குமாரும் ஒப்புக் கொள்ள ஒரு வாட்ஸ் அப் குழுவில், அவரை அதிதி இணைத்துள்ளார்.
அதன்பின்னர், அதிதி கூறியது போல, அவர் வாட்ஸ் அப்பில் அனுப்பிய செயலியின் லிங்கை தரவிறக்கம் செய்த மனோரஞ்சன்,
அதிதி ஆலோசனைப் படி குறிப்பிட்ட கம்பெனி பங்குகளை வாங்கி லாபம் பார்த்துள்ளார்.
இதனால், அதிதி மீது அதீத நம்பிக்கை ஏற்பட, குறிப்பிட்ட அந்த செயலி மூலமாக, அதிதி கூறிய பல நிறுவனப் பங்குகளில்,
கடந்தாண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து மொத்தம் 35.89 லட்சம் ரூபாய் மனோரஞ்சன் முதலீடு செய்துள்ளார்.
அதிக லாபம் வரும் என்று மனோரஞ்சன் எதிர்பார்த்திருந்த நிலையில், அந்த செயலியே முடக்கப்பட்டிருக்கிறது.
அதன்பின்னர் அதிதியும் தொடர்பு எல்லைக்கு வெளியே சென்றுவிட்டார்.
இதனால்தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த மனோரஞ்சன், உடனடியாக ஆவடி போலீஸ் கமிஷனரிடம் அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் விசாரித்தனர்.
இதையடுத்து மனோரஞ்சன் பணம் அனுப்பிய வங்கிக் கணக்கு உள்ளிட்டவற்றை வைத்து விசாரணை மேற்கொண்டவர்கள்,
குஜராத் மாநிலம், ஆனந்த் மாவட்டத்தைச் சேர்ந்த பிரேமாராம் என்பவர்தான் இதன்பின்னணியில் இருப்பதைக் கண்டுபிடித்தனர்.
தன் கூட்டாளிகளுடன் இணைந்து, போலியான செயலி வாயிலாக, 44 நபர்களிடம் 7.50 கோடி ரூபாயை பிரேமாராம் ஏமாற்றியிருப்பதும் தெரியவர,
குஜராத் சென்ற ஆவடி போலீசார், பிரேமாராமை கைது செய்து விசாரிக்கின்றனர்.
தவிர, அவருக்கு உடந்தையாக இருந்த பெண் உள்ளிட்ட கூட்டாளிகளையும் தேடி வருகின்றனர்.
இந்த ஆன்லைன் மோசடிகள் குறித்து, சைபர் க்ரைம் போலீசார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தலை விடுத்துள்ளனர்.
தெரியாத நபர்களிடம் இருந்து வரும் மிரட்டல் அழைப்புகளாக இருந்தாலும், ஆன்லைன் வர்த்தம் போன்ற அழைப்பாக இருந்தாலும் அதுகுறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை.
உடனடியாக சைபர் க்ரைம் பிரிவுக்கு தகவல் தெரிவித்தால், விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.