ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே முன்னாள் ராணுவ வீரர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து கிராம மக்கள் கருப்பு கொடியுடன் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபடுபடப் போவதாக தெரிவித்துள்ளனர்.
கடலாடி அருகே உள்ள சவேரியார் பட்டினம் கிராமத்தை சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் குழந்தை ( வயது 61). இவர் தொழில் விஷயமாக கடலாடி அருகே உள்ள மாரந்தை கிராமத்திற்கு தனது ஜேசிபி இயந்திரத்துடன் சென்றுள்ளா. அப்போது ஆப்பனூர் கிராம முன்னாள் பஞ்சாயத்து தலைவரும், ஒப்பந்ததாரருமான முருகானந்தம் என்பவர் தனது ஆதரவாளர்கள் 10 பேர் கொண்ட கும்பலுடன் சேர்ந்து முன்னாள் ராணுவ வீரர் குழந்தையை, அரிவாள். கம்பு, உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த குழந்தை தற்போது மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையும் படிங்க: கடையடைப்பு, போராட்டம், “தேர்தல் புறக்கணிப்பு” என ஆர்ப்பாட்டம்! – இது எங்கே தெரியுமா?
இந்த தாக்குதல் தொடர்பாக முன்னாள் ராணுவர் வீரர் குழந்தை, இளஞ்செம்பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். ஆனால், புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. குழந்தையை தாக்கிய ஒப்பந்ததாரர் முருகானந்தத்தின் உறவினர்கள் காவல் நிலையத்தில் பணிபுரிவதால்தான், குழந்தை கொடுத்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றுகூறி சவேரியார்பட்டிணம், மற்றும் சவேரியார் சமுத்திரம் ஆகிய இரண்டு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கருப்புக்கொடியுடன் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
தகவலின் பேரில், அங்குவந்த முதுகுளத்தூர்டிஎஸ்பி சின்னக் கண்ணு கிராம மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். பேச்சு வார்த்தையில் எந்தவித உடன்பாடும் எட்டப்படாததால், கிராம மக்கள் கிராமத்துக்குள்ளேயே அமர்ந்து பதாகைகளுடனும், கருப்பு கொடியுடனும் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபடபோவதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து காவல்துறை தரப்பில் கேட்டபோது, முன்னாள் ராணுவ வீரர் குழந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் முருகானந்தம் உட்பட நான்கு பேர் மீது, கொலை முயற்சி உள்ளிட்ட ஐந்து பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகளை தேடி வருவதாகவும், இருந்தாலும் பொதுமக்கள் அவர்களை கைது செய்தால் மட்டுமே தேர்தல் புறக்கணிப்பிலிருந்து வாபஸ் பெறுவோம் என்றும் கூறுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: தேர்தலைப் புறக்கணிக்கிறோம் – இது குமரி மாவட்ட குமுறல்
தமிழகம் முழுவதும் நாளை (19-04-2024) நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கடலாடி அருகே இரண்டு கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட போவதாக கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.