மதம் மாறினால் 10 கோடி ரூபாய் தருவதாகக் கூறி ஆசை தூண்டில் போட்டு, நூதனமுறையில் 5 லட்ச ரூபாயை ஆட்டையைப் போட்ட இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ரூம்போட்டு யோசிப்பாய்ங்களோ என்னும்படி அரங்கேறியுள்ள மோசடி குறித்து பார்ப்போம்!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புதுக்கிராமம் சிந்தாமணி நகரை சேர்ந்தவர் 28வயது விக்னேஷ் பாண்டி. எட்டாம் வகுப்பு வரை படித்துள்ள, விக்னேஷ்பாண்டி, கோவில்பட்டி தெற்கு பஜாரில் உள்ள மளிகை கடையில் வேலை பார்த்து வருகிறார்.
கடந்த டிசம்பர் மாதம் விக்னேஷ் பாண்டியை, செல்போனில் ஐ.எம்.ஓ செயலி மூலம் தொடர்பு கொண்ட பேசிய நபர், கிறிஸ்துவ மதத்துக்கு மாறினால் அமெரிக்காவில் இருந்து 10 கோடி ரூபாய் பெற்றுத் தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
10கோடி ரூபாயா என்று மலைத்துப் போனர் விக்னேஷ் பாண்டி, அந்த மர்ம நபருக்கு சம்மதம் தெரிவிக்க, இதற்காக அமெரிககாவில் வங்கிக் கணக்கு தொடங்கவேண்டும் என்று மர்மநபர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: 1000க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் … கைது செய்யப்படுவாரா எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா?
இதனையடுத்து, அந்த மர்மநபர் அமெரிக்காவில் வங்கிக் கணக்கு தொடர்வதற்காக கட்டணம் அனுப்பி வைக்கும்படி ஒரு வங்கிக் கணக்கு எண்ணை கூறியுள்ளார்.
விக்னேஷ் பாண்டியும் டிசம்பர், ஜனவரி என 2 மாதங்களில் 35 நாட்களில் 20 தவணையாக கிட்டத்தட்ட 4 லட்சத்து 88 ஆயிரத்து 159 ரூபாயை ஜீ பே மூலமாக அனுப்பியுள்ளார்.
ஆனாலும் 10 கோடி ரூபாய் வராததால், விக்னேஷ் பாண்டி தொடர்பு கொண்டபோது, அந்த மர்மநபரின் செல்போன் எண் துண்டிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து தன்னை மோசடி செய்து ஏமாற்றியதாக தெரியவரவே, நேஷனல் சைபர் க்ரைம் பிரிவில் விக்னேஷ் பாண்டி புகார் பதிந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி எஸ்.பி. பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் சைபர் க்ரைம் காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளர் உன்னிகிருஷ்ணன் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் ஜோஸ்லின் அருள் செல்வி தலைமையிலான தனிப்படை போலீசார் குற்றவாளியை பிடிப்பதற்காக தொழில்நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டனர்.
இதில் தஞ்சாவூர் ரெட்டிபாளையம் ஆனந்தம் நகர் பகுதியைச் சார்ந்த மீனாட்சி சுந்தரம் மகன் ராஜவேல் (31) என்பவர் பண மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து அங்கு சென்ற சைபர் கிரைம் போலீசார் ராஜவேலை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் ராஜவேலுவுடன் யார் யார் தொடர்பில் உள்ளார்கள் என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.