அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தள்ளுமுள்ளு காரணமாகக் கதவுகள் உடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருச்சி மாவட்டம் சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலினின் 70வது பிறந்த நாளை முன்னிட்டு ”எங்கள் முதல்வர் எங்கள் பெருமை” என்ற புகைப்பட கண்காட்சி கடந்த 23ஆம் தேதி தொடங்கி நடத்தப்பட்ட வந்தது.
இந்த நிலையில் புகைப்பட கண்காட்சியின் நிறைவு நாளான இன்று தமிழ்நாட்டு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பார்வையிட்டார். அவருடன் இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் அமைச்சர் நேரு உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியைக் காண நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் குவிந்த நிலையில், கதவுகள் அடைக்கப்பட்டன. இந்த நிலையில் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள வந்த சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார் மற்றும் இனிகோ இருதய ராஜி, கதிரவன் ஆகியோரை உள்ளே விடாமல் பாதுகாப்பிற்காக பவுன்சர்கள் கதவை அடைத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் தங்களை உள்ளே விடக் கோரி பவுன்சர்களிடம் சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பவுன்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் என்றால் விரைவில் உள்ளே வந்திருக்க வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து கூடியிருந்த திமுக நிர்வாகிகள் உள்ளே நுழைய முற்பட்டபோது கதவுகள் உடைக்கப்பட்டது.
மேலும் அமைச்சர்கள் பங்கேற்கும் விழாவில் காவலர்கள் மட்டுமே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பொழுது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சியில் கதவுகள் உடைக்கப்பட்ட சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது