ஆம்பளயா இருக்கறதுக்கும் வீரத்துக்கும் என்ன தொடர்பு. உங்கள் தலைவர் இரும்புப்பெண் ஜெயலலிதா அம்மையார் ஆம்பளயா? எடப்பாடி பழனிசாமியின் பேச்சை சுட்டிக்காட்டி, இயக்குநர் நவீன் காட்டமான விமர்சனம் செய்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு பிரச்சார களம் சூடு பிடிக்க துவங்கியுள்ளது.வரும் 27ஆம் தேதி நடைபெறும் இடைத்தேர்தலுக்கான பரப்புரையில் அனைத்து கட்சியினரும் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தேர்தலில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அணி சார்பாக போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் நேற்றைய தினம் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர் தேர்தல் நேரத்தில் திமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக அவர் குற்றம்சாட்டினார்.மேலும் தேர்தல் நேரங்களில் மட்டும் வாக்காளர்களை அடைத்து வைத்து உள்ளனர். ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கழித்த நிலையில் இன்னும் தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை இந்த அரசு நிறைவேற்ற வில்லை என்று தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து‘ஆம்பளையாக இருந்தால் வாக்காளர்களை வெளியே விட்டு அவர்களை சந்தித்து வாக்கு சேகரியுங்கள்’ என கூறினார். இந்த கருத்து நேற்று முதல் பல்வேறு சர்ச்சைகளையும் விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது.
இந்நிலையில் திரைபட இயக்குனர் நவீன் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், ‘ஆம்பளயா இருக்கறதுக்கும் வீரத்துக்கும் என்ன தொடர்பு. உங்கள் தலைவர் இரும்புப்பெண் ஜெயலலிதா அம்மையார் ஆம்பளயா? நீங்கள் தவழ்ந்து சென்று கால்பிடித்த சசிகலா ஆம்பளயா? இன்னும் எத்தனை காலம் இந்த stereotype வசனம் பேசுவீங்க? இது பெண்களை இழிவு படுத்தும் செயல்’ என கருத்து தெரிவித்துள்ளார்.