சட்டசபையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை ஓபிஎஸ்க்கு சென்றதால் எடப்பாடி பழனிசாமி சட்டசபைக்கு வராமல் கூட்டத்தை புறக்கணித்தார்.
கடந்த 2022-23ஆம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கை மீதான விவாதம் ஏப்ரல் 6ஆம் தேதி தொடங்கி மே 10ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், இந்த ஆண்டுக்கான 2வது சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது.
தமிழக சட்டசபை கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும், மறைந்த முன்னாள் சபாநாயகர் சேடபட்டி முத்தையா மறைவுக்கும், உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ் மறைவுக்கும், கோவை தங்கம் உள்ளிட்ட முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மறைவுக்கும் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.
இதையடுத்து பேரவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையில், அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி – ஓ.பன்னீர்செல்வம் இடையேயான மோதல் சட்டப்பேரவையிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.
இன்று தொடங்கிய சட்டசபை கூட்டத்தில் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை தொடர்பாக புதிய முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை. இதனால் பழைய நடைமுறையே தொடர்கிறது.
இதையடுத்து சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று நடைபெறவுள்ள நிலையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வைத்திலிங்கம் மனோஜ் பாண்டியன் ஆகியோர் தனியார் பாதுகாவலர்களுடன் வருகை தந்தனர்.எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை ஆர்.பி.உதயகுமாருக்கு ஒதுக்கப்படாமல் ஓபிஸ்க்கு தொடர்கிறது.
இதனால் சட்டசபை நிகழ்வுகள் தொடங்கிய நிலையில், எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவருடைய ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் ஒருவர் கூட தலைமைச்செயலகம் வரவில்லை.