கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்திற்கு பயிற்சிக்காக சென்ற சுபஸ்ரீ என்ற பெண் செம்மேடு பகுதியில் கிணற்றில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது.
கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் யோகா வகுப்புகளில் சுபஸ்ரீ கலந்து கொண்ட பிறகு காணாமல் போனார். டிசம்பர் 11 முதல் ஒரு வார கால ‘மௌன’ யோகா வகுப்பு நடைபெற்றது .இந்த நிலையில் ஒரு வாரத்திற்குப் பிறகு டிசம்பர் 18ஆம் தேதி அவரை அழைத்துச் செல்ல கணவர் மணிக்குமார் (40) சென்றபோது, அவர் மையத்தில் இல்லை என்று அதிர்ச்சி அடைந்தார்.
இதனை தொடர்ந்து கணவர் மணிகுமார் காணாமல் போனவர் போலீசில் புகார் அளித்தார் . மேலும் இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.அந்த விசாரணை அறிக்கையில் ஞாயிற்றுக்கிழமை வகுப்புகள் காலை 11 மணிக்கு முடிந்து, மனைவியை அழைத்துச் செல்வதற்காக காத்திருந்தார். மதியம் 3 மணி வரை அங்கேயே காத்திருந்தார்.
ஆனால் சுபஸ்ரீ வெளியில் வரவில்லை. அப்போது தான் வகுப்புகள் முடிந்து அனைவரும் கிளம்பி விட்டதை அறிந்து கொள்ள மணிகுமார் தனது மனைவி எங்கே இருக்கிறார் என்று பார்க்க ஈஷா யோகா மையத்தின் உள்ளே சென்றார். வரவேற்பறையில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், சுபஸ்ரீ 9:30 மணியளவில் ‘சர்பவசல்’ (ஈஷா யோகா மையத்தின் நுழைவு வாயில்) வழியாக நிறுவனத்தை விட்டு வெளியேறியது தெரியவந்தது.
இந்த நிலையில் கோவையில் டிசம்பர் 18, 2022 அன்று காணாமல் போன 34 வயதான சுபஸ்ரீயின் சடலம் யோகா மையத்திலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள செம்மேடு என்ற இடத்தில் உள்ள கிணற்றில், ஜனவரி 1, ஞாயிற்றுக்கிழமை, அன்று சுபஸ்ரீயின் சடலத்தை போலீஸார் கண்டுபிடித்தனர். இதனை தொடர்ந்து மரணத்திற்கான காரணத்தை அறிய பிரேத பரிசோதனை நடந்து வருகிறது.
இந்த நிலையில் சுபஸ்ரீ மரணம் குறித்து அவதூறு செய்திகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசுக்கு ஈஷா கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து அறிக்கை விடுத்துள்ள ஈஷா, ”சுபஶ்ரீ அவர்களின் அகால மரணம் துரதிஷ்டவசமானது. யாரும் எதிர்பாராத வகையில் நிகழ்ந்த இந்த துயர சம்பவம் எங்களுக்கு அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. இம்மரணம் தொடர்பாக தமிழ்நாடு காவல்துறை தனிப்படைகளை அமைத்து விசாரணை நடத்தி வருகிறது.
இதனை தொடர்ந்து சுபஸ்ரீ குறித்த வழக்கு பதிவாகி காவல்துறை விசாரணையை துவங்கியது முதல் இன்று வரை விசாரணைக்கு தேவையான அனைத்து விவரங்களையும் முறையாக வழங்கி உள்ளோம். காவல்துறை தனது விசாரணையை தொடர்ந்து கொண்டு இருக்கிறது.
இந்நிலையில் வெற்று சந்தேகங்களை ஊதிப் பெரிதாக்கி, அபத்தமான அனுமானங்களை அள்ளி இரைத்து வதந்திகளையும், அவதூறுகளையும் ஒரு சில இயக்கங்களும், ஊடகங்களும் உள்நோக்கத்தோடு செய்திகளாக வெளியிடுவதும், பேசுவதும் வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்துள்ளது.