தேசிய மருத்துவ ஆணையம், என்எம்சி விரைவில் இந்தி, தமிழ் மற்றும் பிற பிராந்திய மொழிகளில் எம்பிபிஎஸ் படிப்புகளை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. கல்வி அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய மொழிகளை மேம்படுத்துவதற்கான உயர் அதிகாரக் குழு, ஆணையம் மற்றும் பிற மாநில மருத்துவ கவுன்சில், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பேராசிரியர்கள் மற்றும் பலவற்றுடன் கலந்துரையாடலைத் தொடங்கியுள்ளது.
இந்த நிலையில் ,தமிழ்நாட்டின் டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், எம்பிபிஎஸ் பாடத்தை மாநில மொழிகளில் தமிழ் அறிமுகப்படுத்துவதற்கான சொற்களஞ்சியம் மற்றும் வரையறைகளைத் தயாரிக்கத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவப் படிப்பை பயிற்றுவிக்கும் திட்டத்தின் கீழ் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளிலும் மருத்துவப் பாடநூல்கள் வெளியிடப்படவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளதற்கு அன்புமணி ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ மருத்துவப் படிப்பை மாநில மொழிகளில் பயிற்றுவிக்கும் திட்டத்தின் கீழ், மருத்துவப் பாட நூல்கள் இந்தியில் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அடுத்தக்கட்டமாக தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளிலும் மருத்துவப் பாடநூல்கள் வெளியிடப்பட இருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. இந்த விஷயத்தில் மத்திய அரசின் நோக்கம் நேர்மையானதாக இருந்தால் அது நிச்சயமாக வரவேற்கத்தக்கது என்று கூறியுள்ளார்.
90 சதவீத நோயாளிகளுக்கு ஆங்கிலம் தெரிந்திருக்கவில்லை. இது மாணவர்களிடமும் பிரச்னையாக உள்ளது. நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து அவர்களுக்கு புரியும் மொழியில் மருத்துவர்கள் விளக்க வேண்டும் என்பதை உறுதி செய்வதற்காகவே தாய்மொழி வழி கற்பித்தல் திட்டத்தை அறிமுகப்படுத்துவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தாய்மொழிவழி கற்பித்தலுடன் ஆங்கில வழி கற்பித்தலும் தொடரும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.
அகில இந்திய ஒதுக்கீடு 36 ஆண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்டது அப்பொழுது அதற்கான தேவை இருந்திருக்கலாம்அதன்பின் 36 ஆண்டுகளில் மருத்துவக் கல்வி பரவலாக்கப்பட்டுள்ளது.மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு முறையை ரத்து செய்வதும், அந்தந்த மாநிலத்தில், அந்தந்த மாநில மாணவர்களுக்கு மட்டும் வாய்ப்பளிப்பதும் தான் முன்னேற்றத்துக்கான வழி என்று தெரிவித்துள்ளார்.
எனவே,உடனடியாக தமிழக அரசு தாய்மொழிவழி மருத்துவக் கல்வி கற்பித்தல் திட்டத்திற்கு முன்னோட்டமாக அகில இந்திய ஒதுக்கீட்டு முறையை ரத்து செய்ய வேண்டும். மேலும் தமிழ்நாட்டில் தமிழ்வழி மருத்துவக் கல்வி திட்டத்தை விரைவாக கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.