வேற்று சமூகத்தைச் சேர்ந்த மக்களை அனுமதிக்க கூடாது என கோயில் பூசாரி ராஜனின் மனைவி சாமி ஆடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் அந்த வீடியோவில் சிங்கம்மாள் சாமி ஆடியபடி, குறிப்பிட்ட மக்களை,`நீங்க எல்லாம் உள்ள வரக் கூடாது’ என்று அவர்களது சமூகத்தினரைக் குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார். மேலும் அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலானது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கந்தர்வக்கோட்டை அருகே உள்ள இறையூர்,வேங்கவயல் பகுதியில் ஆதிதிராவிடர் குடியிருப்பில் பகுதியில் உள்ள குடிநீர்த் தேக்கத் தொட்டியில், மர்ம நபர்கள் சிலர் மலம் கலந்து உள்ளனர்.மேலும் அந்த தண்ணீரை அருந்திய மக்கள் உடநலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் இந்த விவகாரம் தமிழகம் முழுவதிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே ஆகியோர் வேங்கவயல் பகுதிக்கு நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டனர் . அப்போது தான் மாவட்ட ஆட்சியர் அதிர்ச்சி அடைந்தார். அந்த கிராமத்தில் அய்யனார் கோயிலில் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்களை பல தலைமுறைகளாக உள்ளே கோவிலுக்குள் அனுமதிக்கவில்லை.
அந்த கிராமத்தில் காலம் காலமாக இரட்டைக்குவளை முறை மாற்றுச் சாதியினரால்,வெறுப்பு , சாதியத் தீண்டாமை தொடர்ந்து இருந்து வருகிறது“ அங்குள்ள ஊர் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட மக்களை மாவட்ட ஆட்சியர் கோயிலுக்குக் அழைத்து சென்று சாமி கும்பிட வைக்க உத்தரவிட்டார்.
இந்த நிலையில் தான் மாவட்ட ஆட்சியரின் கண்முன்பே வேறு சமூகத்தை சேர்ந்த கோயில் பூசாரி ராஜன் மனைவி சிங்கம்மாள் சாமி ஆடியபடி, `நீங்க எல்லாம் கோவில் உள்ள வரக் கூடாது’ என்று பட்டியல் சமூகத்தினரைக் குறிப்பிட்டுப் பேசியதை பார்த்து அதிர்ச்சியடைந்த ஆட்சியர், சிங்கம்மாள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இந்த நிலையில் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரம் தமிழ்நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில் அது தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு விசாரித்து வந்தது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு சிபிசிஐடி விசாரிக்கும் என அறிவிப்பு வெளியானது.
இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,
காவல்துறை ஆணையரே வழக்கினை குற்றப்புலனாய்வுத்துறைக்கு மாற்றுவதாக கூறுவது, காவல்துறையை தனது நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதலைமைச்சர் அவர்களின் நிர்வாகத்திறனுக்கு ஏற்பட்ட தலைகுனிவில்லையா? முதலமைச்சர் இதற்கு என்ன பதில் கூறப்போகிறார்கள்? என்று கேள்வி எழுப்பியுள்ள சீமான்,
எதற்கெடுத்தாலும் குழு அமைக்கும் திமுக அரசு அமைத்த சமூகநீதி கண்காணிப்பு குழு வேங்கைவயல் கிராமத்தில் செய்த விசாரணை என்ன? நடத்திய ஆய்வு என்ன? கொடுத்த அறிக்கை என்ன? அதன் பெயரில் எடுத்த நடவடிக்கை என்ன? இதுதான் 60 ஆண்டுகாலமாக திராவிடம் தமிழர் மண்ணில் கட்டிக்காத்த சமூகநீதியா? என்றும் கேள்விகளை முன்வைத்தார்.
மேலும், “குற்றப்புலனாய்வுத் துறை விசாரணை என்ற பெயரில் வேங்கைவயல் தீண்டாமைக் கொடுமை வழக்கினை தமிழ்நாடு அரசு மேலும், மேலும் காலம் தாழ்த்தி நீர்த்துப்போகச் செய்யாமல் குற்றவாளிகளை விரைந்து கைது செய்து சட்டப்படி கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும்” என்றும் சீமான் வலியுறுத்தியுள்ளார்.