மாமல்லபுரத்தில் டபிள்யூ.வி.கனெக்ட் நிறுவனம் சார்பில் 101 பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு 1 கோடி ரூபாய் செலவில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
பசுமை தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி, அதிமுக செய்தித் தொடர்பாளர் அப்சராரெட்டி, முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் மனைவி ரம்யா, டபிள்யூ. வி.கனெக்ட் அமைப்பின் தலைமை செயல் அதிகாரி தட்சிணாமூர்த்தி, இயக்குனர் நந்தினி விஜய் உள்ளிட்டோர் முன்னிலையில் இந்த திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டன.
டபிள்யூ.வி. கனெக்ட் சார்பில் திருமணத்திற்கான சிறந்த சுற்றுலாதலமாக மாமல்லபுரத்தை பிரபலப்படுத்தும் நோக்கில் ஆசியாவின் மிகப்பெரிய திருமண ஏற்பாட்டாளர்கள் மாநாடு நடைபெற்று வரும் நிலையில் 3 ஆம் நாளான இன்று, மிகபிரமாண்டமாக இந்த திருமண ஏற்பாடு செய்யப்பட்டது.
101 பொருளாதாரத்தில் பின்தங்கிய மாற்றுத்திறனாளிகள் ஜோடிகளுக்கு ஒரே நேரத்தில் திருமணம் செய்து வைக்கப்பட்டது கின்னஸ் சாதனியாகவும் பதிவு செய்யப்பட்டது. மேலும் இந்த 101 புதுமண தம்பதிகளுக்கும், தாலி, பட்டுப்புடவை, வேட்டி சட்டை, 1 மாதத்திற்கு தேவையான சமையல் பொருட்கள், வீட்டு உபயோகப்பொருட்கள், படுக்கை உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களும் வழங்கப்பட்டன.
பொருளாதாரத்தை தாண்டி ஒவ்வொருவரின் திருமண கனவையும் நிறைவேற்றவும், திருமணங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதாக டபிள்யூ.வி. கனெக்ட் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜியோ பவுண்டேஷன் மற்றும் மதர் எர்த் பவுண்டேஷன் ஆகியற்றுடன் இணைந்து தேவையுடைய 101 ஜோடிகளை மிக கவனமாக தேர்ந்தெடுத்ததாகவும் டபிள்யூ.வி. கனெக்ட் அமைப்பு தெரிவித்துள்ளது.