தென்னிந்தியாவில் அண்மைக்காலமாகக் கேரளா மாநிலம் ,புதுச்சேரி மற்றும் தமிழகம் போன்ற இடங்களில் போதைப் பொருள்களின் பயன்பாடுகள் அதிகரித்து வருகிறது.இதனால் சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை பாதிக்கப்படுவது மட்டும் அல்லாமல் அவர்களின் வாழ்க்கை கேள்விக் குறியாக்கி உள்ளது.
போதைப் பொருள் பழக்கத்தால் பள்ளி – கல்லூரி மாணவர்களை டார்கெட் செய்து போதைப் பொருள் மாஃபியாக்கள், விற்பனைச் செய்கிறார்கள். தின்பண்டங்கள்போல சர்வ சாதாரணமாகப் போதைப்பொருள்கள் கிடைக்கின்றன. இதன் புழக்கத்தை மொத்தமாகத் துடைத்தெறிய வேண்டும் என்றால், அதற்கு உதவியாக இருப்பவர்களை முதலில் கட்டம் கட்ட வேண்டும் என்பதற்கு உதாரணமாக ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையில் ஒரு அதிரடி சம்பவம் நடந்திருக்கிறது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் விற்பனைச் செய்யும் சட்டவிரோத கும்பலோடு, காவல் துறையினர் சிலரே கூட்டுச்சேர்ந்து ‘கல்லா’ கட்டுவதாக எஸ்.பி தீபா சத்தியனுக்கு ரகசியமாகத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், சம்பந்தப்பட்ட காவலர்கள் ரகசியமாகக் கண்காணிக்கப்பட்டனர்.
மேலும் அவர்களின் அலைப்பேசி அழைப்புகளும் ஆய்வுக்குஉட்படுத்தப்பட்டன. அதில், உறுதியான தகவல்கள் கிடைக்கவே, சோளிங்கர் காவல் நிலைய ஏட்டு வேணுகோபால், அரக்கோணம் வட்டம் காவல் நிலைய ஏட்டு ரமேஷ், அரக்கோணம் நகரக் காவல்நிலைய காவலர் கண்ணன் ஆகிய 3 பேரையும் இடைநீக்கம் செய்து அதிரடியாக உத்தரவிட்டிருக்கிறார் எஸ்.பி தீபா சத்தியன்.
மேலும் ராணிப்பேட்டை மாவட்டத்தில், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் விற்பனைச் செய்யும் சட்டவிரோத கும்பலோடு, காவல் துறையினர் சிலர் கூட்டுச்சேர்ந்து அவர்களிடம் லஞ்சம் வாங்கிய 3 காவல்துறையினரை இடைநீக்கம் செய்ததை பொது மக்கள் வெகுவாக பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.