“தமிழகத்துக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் மத்திய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்” என்று முதல்வர் ஸ்டாலின் சாடியுள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாக தமிழகம் கோரியது 37,907 கோடி ரூபாய். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழக அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய். ஆனால், மத்திய பாஜக அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய். இதுவும் நாம் உச்ச நீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்துக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் மத்திய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தமிழகத்தில் 2023-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் பாதிப்புக்காக ரூ.115.49 கோடியும், அதே மாதம் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்த மழை, வெள்ள பாதிப்புக்காக ரூ.160.61 கோடியும் நிவாரணமாக மொத்தம் ரூ.276 கோடியை மத்திய அரசு இன்று விடுவித்தது. தமிழகத்துக்கு ரூ.276 கோடி நிதியளித்த அதேநேரம், கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளதாக நிவாரணம் கோரிய கர்நாடக அரசுக்கு ரூ.3454 கோடி நிதியை மத்திய அரசு விடுவித்தது.
நிதி ஒதுக்கீட்டில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக தமிழக அரசியல் கட்சிகள் தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில், தமிழகத்துக்கு வழங்கப்பட்ட நிதியையும், கர்நாடகாவுக்கு வழங்கப்பட்ட நிதியையும் வைத்து மத்திய அரசு மீது தமிழகத்தில் அதிருப்தி எழுந்துள்ளன. இந்த நிலையில் தான் முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசை கடுமையாக சாடியுள்ளார்.