“நாட்டு மக்கள் மீதான உங்களின் அர்ப்பணிப்பு உங்களை உயரிய இடத்துக்கு அழைத்துச் செல்லும்.” என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் எம்.பியும், இண்டியா கூட்டணியின் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் 54 வது பிறந்த நாள் இன்று (ஜூன் 19) . அதனை முன்னிட்டு அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் , ராகுல் காந்திக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பிறந்தநாள் வாழ்த்து செய்தியில், “பிறந்தநாள் வாழ்த்துக்கள் அன்புச் சகோதரர் ராகுல் காந்தி. நாட்டு மக்கள் மீதான உங்களின் அர்ப்பணிப்பு உங்களை உயரிய இடத்துக்கு அழைத்துச் செல்லும். நீங்கள் தொடர்ந்து முன்னேறவும், வெற்றியடையவும் எனது வாழ்த்துக்கள்.” என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : “உங்களது ‘அன்பின் கடை’.. ராகுல் காந்திக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் பிறந்தநாள் வாழ்த்து!
இந்தப் பதிவுடன் ராகுல் காந்தி வீடியோ பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின். அதில், ராகுல் காந்தி ஸ்டாலினை சகோதரன் அழைத்த காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இதேபோல் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே வெளியிட்டுள்ள பிறந்த நாள் வாழ்த்து செய்தியில், “இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ராகுல் காந்தி . இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மதிப்புகள் மீதான உங்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பும், மில்லியன் கணக்கான கேட்கப்படாத குரல்களின் மீது நீங்கள் காட்டும் இரக்கமும் தான் உங்களின் தனித்த பண்புகள்.
வேற்றுமையில் ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் கருணை என்ற காங்கிரஸ் கட்சியின் நெறிமுறைகள் உங்களின் எல்லா செயல்களிலும் தெரிகிறது. உண்மையின் கண்ணாடியை அதிகாரத்துக்கு காட்டி, கடைசியாக நிற்கும் நபரின் கண்ணீரைத் துடைக்க முயலும் உங்கள் பணியில் நீங்கள் தொடர்ந்து ஆர்வமாக இருக்கிறீர்கள். நீங்கள் நீண்ட, ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையைப் பெற வாழ்த்துகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.