தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்துக்கு காரணமான அமைப்புகள் வெளிநாட்டு நிதி பெற்றது தெரியவந்தது என ஆளுநர் ரவி மாணவர்கள் இடையே பேசியதை ஆளுநர் மாளிகை ட்வீட் செய்துள்ளது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், இந்திய குடிமைப்பணி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுடன் “எண்ணித் துணிக” என்று நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டார். அப்போது மாணவர்கள் ஆளுநரின் பணி குறித்து எழுப்பிய கேள்விக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம் அளித்தார்.
இது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் ராஜ் பவன் தரப்பில் ஆளுநர் ரவி மாணவர்கள் இடையே பேசியதை ட்வீட் செய்து ஆளுநர் மாளிகை விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
மாணவர்களுக்கு அளித்த பதிலில், “ஆளுநரின் உச்சப்பட்ச பொறுப்பே அரசியலைமைப்பை பாதுகாப்பது. மாநிலமோ, மத்திய அரசோ இரண்டு அமைப்புகளுமே அரசியலமைப்புக்கு உட்பட்டுத்தான் நடக்க வேண்டும். அரசியலமைப்பில் மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் உள்ள அதிகாரங்கள் என்ன என்பது தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன.
மேலும் வெளிநாட்டிலிருந்து ஒரு பெரிய தொகையை ஒரு தனி நபரோ, தொண்டு நிறுவனமோ நன்கொடையாக பெறுகிறது. அது ஒருமுறை என்றால் பிரச்சனை இல்லை. தொடர்ந்து அத்தகைய நன்கொடை வருமானால், அங்கு எஃப்சிஆர்ஏ எனப்படும் வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டம் வரும்,
இந்த சட்டம் மூலம் அனைத்து வெளிநாட்டு நன்கொடை வரவும் உள்துறை அமைச்சகத்தின் கண்காணிப்பின் கீழ் வரும். இப்படி வரும் நன்கொடைகளை சில தொண்டு நிறுவனங்கள் மற்றும் சில நிறுவனங்கள் தேசத்துக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளது.
உதாரணமாக தென் மாவட்டத்தில் அணுஉலை திட்டத்துக்கான வேலை தொடங்கும் போதெல்லாம் பாதுகாப்பு அச்சுறுத்தல், காலநிலை மாற்ற தாக்கம், வெடிப்பு, மனித உரிமை மீறல்கள் என்றெல்லாம் சொல்லி போராட்டங்கள் வெடித்தன.
அப்போது யாரும் பசி பட்டினியோடு நீண்ட காலம் போராட முடியாது. இது குறித்து ஆய்வு செய்தபோது போராட்டங்களுக்கு பின்னால் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் இருந்தெல்லாம் பெரிய அளவில் நிதி வந்தது தெரியவந்தது.
வடகிழக்கு மாநிலங்களில் சிலர் போலி நிறுவனங்களை வெளிநாடுகளில் ஆரம்பித்து ரூ. 200 கோடி ரூபாய் வரை ஆண்டுதோறும் நிதி பெற்று இந்தியாவில் மதமாற்றத்துக்காக பயன்படுத்தினர். இதுபோன்ற தேச நலனை பாதிக்கும் விவகாரங்களில் வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்படுவதை அனுமதிக்க முடியாது என்று தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து பேசிய ஆளுநர் ,இந்த ஆம்னெஸ்டி அமைப்பு குறித்து விசாரணை நடத்தியபோது அதற்கு வெளிநாட்டிலிருந்து பண உதவி வருவது கண்டுபிடிக்கப்பட்டது.
கேரளாவின் விழிஞ்சம் துறைமுக திட்டம் ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் என்ற மிகப்பெரிய மனித உரிமை அமைப்பின் இடையூறால் ஓராண்டுக்கும் மேல் தடைபட்டது. பசுமை தீர்ப்பாயம், உச்சநீதிமன்றம், அரசு அனைத்தும் திட்டத்தால் எந்த பிரச்சனையும் இல்லை என்று சொல்லியும் அதை நிறைவேற்ற முடியவில்லை.
இந்த ஆம்னெஸ்டி அமைப்பு குறித்து விசாரணை நடத்தியபோது அதற்கு வெளிநாட்டிலிருந்து பண உதவி வருவது கண்டுபிடிக்கப்பட்டது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்துக்கு காரணமான அமைப்புகள் வெளிநாட்டு நிதி பெற்றது தெரியவந்துள்ளது. துரதிருஷ்டவசமாக ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடந்த போலீஸ் துப்பாக்கி சூட்டில் அப்பாவி மக்களின் உயிர்கள் பலியானது கவலைக்குரிய விஷயம்.
இந்திய தேவையில் 40% தாமிரத்தை ஸ்டெர்லைட் ஆலை உற்பத்தி செய்தது. அது மூடப்பட்டதால் இந்தியாவின் தாமிர தேவை பாதிக்கப்பட்டது. இந்தியாவின் மின்னணு உற்பத்திக்கு முக்கிய தேவை தாமிரம். அதன் உற்பத்தியை முடக்கும் பின்னணியில் இருந்தவர்கள் அந்நிய நிதியை பெற்றது தெரியவந்துள்ளது.
பாப்புலர் ஃபிரண்ட் அமைப்பு, இந்தியா சகோதரத்துவ அமைப்பு என்று ஒரு அமைப்பை ஆரம்பித்துக் கொண்டு வெளிநாட்டிலிருந்து நிதி பெற்று இந்தியாவில் தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபடுகிறது.
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களிலிருந்து சிரியா, ஆப்கானிஸ்தான், ஈரானில் உள்ள ஐ.எஸ் அமைப்பில் சேருபவர்களில் 90% பேர் பாப்புலர் ஃபிரண்ட் அமைப்பின் மூலமாகவே செல்கின்றனர்.
பிரச்சனைகளுக்காக போராடும் உரிமையை அரசியலமைப்பு மக்களுக்கு வழங்கியுள்ளது. தேச நலனை பாதுகாக்க அரசு அதன் பணியை செய்கிறது. வேண்டுமென்றே தேச ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்க முயற்சி செய்வதும் வளர்ச்சியை தடுக்க முயல்வதும் தவறு என்று ஆளுநர் கூறினார்.இவ்வாறு பேசியதை ஆளுநர் ரவி மாணவர்கள் இடையே பேசியதை ஆளுநர் மாளிகை ட்வீட் செய்துள்ளது.