#BREAKING | கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ் ₹1.50 கோடி செலவில் கரூர், நாகப்பட்டினம், திருவண்ணாமலை, தஞ்சாவூர், கடலூர் ஆகிய 5 மாவட்டங்களுக்கான நடமாடும் பன்நோக்கு கண் மருத்துவப் பிரிவு சேவை வாகனங்களை கொடியசைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தொடங்கி வைத்தார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (18.04.2023) தலைமைச் செயலகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ், 1.50 கோடி ரூபாய் செலவில் ஐந்து மாவட்டங்களுக்கான நடமாடும் பன்நோக்கு கண் மருத்துவப் பிரிவு சேவை வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தேசிய நலவாழ்வுக் குழுமத்தில், பார்வை இழப்பு தடுப்பு திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. தமிழ்நாட்டில் 2021-22-ஆம் ஆண்டு கள் ஆய்வறிக்கையின்படி, தவிர்க்கக்கூடிய பார்வை இழப்பிற்கான காரணிகள் மற்றும் பார்வை குறைபாட்டிற்கான முக்கிய காரணிகளில் முதியோர்களுக்கு ஏற்படும் கண்புரை ஒன்றாகும். இதை களையும் பொருட்டு, இப்பகுதிகளில் அதிகமான கண்புரை அறுவை சிகிச்சை முகாம்கள் நடத்துவதற்கும், நோயாளிகளை அறுவை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்வதற்கும் வசதியாக, மாவட்டத்திற்கு ஒரு நடமாடும் கண் மருத்துவப் பிரிவிற்காக புதிதாக வாகனம் வழங்கப்படுகிறது.
2021-22ஆம் ஆண்டிற்கான மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மானியக் கோரிக்கையில், கரூர், நாகப்பட்டினம், திருவண்ணாமலை, தஞ்சாவூர் மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு நடமாடும் கண் சிகிச்சை வாகனங்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, மாவட்ட நடமாடும் பன்நோக்கு கண் மருத்துவப் பிரிவு சேலம், திருவள்ளூர் மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஏற்கனவே நிறுவப்பட்டதன் தொடர்ச்சியாக, கரூர், நாகப்பட்டினம், திருவண்ணாமலை, தஞ்சாவூர் மற்றும் கடலூர் ஆகிய ஐந்து மாவட்டங்களில் தமிழ்நாடு நலவாழ்வுக் குழும நிதி உதவியுடன் 1.50 கோடி ரூபாய் செலவில் விரிவுபடுத்தும் வகையில், ஐந்து மாவட்டங்களுக்கு நடமாடும் பன்நோக்கு கண் மருத்துவப் பிரிவு சேவைக்கான 5 வாகனங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம் தொடங்கி வைத்தார்.
இந்த குளிரூட்டப்பட்ட வாகனம், கணினி கண் பரிசோதனை கருவி, சர்க்கரை நோய் விழித்திரை நிழற்படங்கள் எடுக்கும் கருவி ஆகியவற்றை கொண்டுள்ளது. கண் பரிசோதனைக்கான மருத்துவ உபகரணங்களுடன் இவ்வாகனம், தினம் ஒரு கிராமத்திற்கு சென்று, கண் மருத்துவ உதவியாளர்களால் அப்பகுதியில் உள்ள முதியோர்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் அறுவை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளுக்கு இவ்வாகனத்தில் அழைத்து வரப்பட்டு, அறுவை சிகிச்சை முடிந்த பின்னர் மீண்டும் அவர்களை அதே வாகனத்தில் அவர்களின் இல்லத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.
இத்திட்டம் தமிழ்நாடு. கண்புரை பார்வையிழப்பு இல்லா மாநிலமாக விளங்கிட பெரிதும் உதவும். மேலும், இரத்த அழுத்தம், இருதய பாதிப்பு, நீரிழிவு போன்ற இணை நோய்களுடன் கண்புரை பாதிக்கப்பட்ட முதியோர்களுக்கும், துணையின்றி தவிக்கும் முதியோர்களுக்கும், அரசு மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்கு இந்தப் வாகனம் பெரிதும் பயன்படும்.
இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு மா. சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் ப. செந்தில்குமார் இ.ஆ.ப, தேசிய நலவாழ்வுக் குழுமத்தின் இயக்குநர் திருமதி ஷில்பா பிரபாகர் சதீஷ், இ.ஆ.ப, தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் திரு. ம.அரவிந்த், இ.ஆ.ப, தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநர் மரு. ச.உமா, இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.