கலைஞர்: வரலாறு எனும் வானில் வெட்டிவிட்டு மறைந்த மின்னல் அல்ல; அந்த வானத்தை ஆளும் சூரியன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
கலைஞரின் 101 ஆவது பிறந்த நாள் இன்று தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.சென்னை மெரினாவில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் 3 தொகுப்புகள் கொண்ட கலைஞர் நூற்றாண்டு சிறப்பு மலரை வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து அண்ணா நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ள ’கலைஞர் நூற்றாண்டு நினைவலைகள்’ புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார்.
இதனைத் தொடர்ந்து ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.பின்னர் முரசொலி அலுவலகம் வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கலைஞர் நூற்றாண்டு நிறைவு மலரை வெளியிட்டார்.
தொடர்ந்து தமிழகம் முழுவதும் திமுக நிர்வாகிகள் கலைஞரின் 101 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் கலைஞர்: வரலாறு எனும் வானில் வெட்டிவிட்டு மறைந்த மின்னல் அல்ல; அந்த வானத்தை ஆளும் சூரியன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,
பிறந்தார் – நிறைந்தார் என்ற வாழ்வின் இரு புள்ளிகளுக்கிடையில்,
தொட்ட துறைகளில் எல்லாம் உச்சம் தொட்டார்!
ஒடுக்கப்பட்ட மக்களுக்காக வாழ்ந்தார்!
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகப் பாடுபட்டார்!
தமிழினத்தின் எழுச்சிக்காக உழைத்தார்!
வரலாற்றைத் தன்னைச் சுற்றிச் சுழலவிட்டார்!
முத்தமிழறிஞர் கலைஞர் எனும் பேருழைப்பில் தமிழ்நாடு வளம் பெற்றது! தமிழினம் நலம் பெற்றது!
இந்த நூறாண்டுகளில் நிகழ்ந்துள்ள தமிழ்ப் புரட்சி – தமிழினத்தின் எழுச்சி – தமிழ்நாட்டின் வளர்ச்சி என எங்கும் எதிலும் தலைவர் கலைஞரின் முத்திரை பதிந்துள்ளது. அவரது புகழை நாளும் சொல்வது, நாளை நாம் பெற வேண்டிய வெற்றிகளுக்குப் பாதை அமைப்பதாகும்!
கலைஞர்: வரலாறு எனும் வானில் வெட்டிவிட்டு மறைந்த மின்னல் அல்ல; அந்த வானத்தை ஆளும் சூரியன்!
மூத்த பிள்ளை முரசொலி முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பெருவாழ்வையும் தொண்டையும் சொல்லும் “தமிழினத் தலைவர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு மலர் 2024” என்ற நூலை உருவாக்கியுள்ளது. இந்தப் புத்தகம் உங்கள் கைகளில் தவழ வேண்டும்! அதிலுள்ள கருத்துகள் நெஞ்சில் நிலைக்க வேண்டும்! என்று குறிப்பிட்டுள்ளார்.