லைக்கா’ பட தயாரிப்பு நிறுவனம் தொடர்புடைய அலுவலகங்களில் நடத்திய சோதனைக்கு பின், விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதியை, விசாரணை வளையத்திற்குள் அமலாக்கத் துறை கொண்டு வந்துள்ளது.
சட்ட விரோத பண பரிமாற்றம் தொடர்பாக, சினிமா படங்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள, ‘லைக்கா’ நிறுவன அலுவலகங்களில், அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அமைச்சர் உதயநிதியின், ‘ரெட் ஜெயன்ட்’ பட தயாரிப்பு நிறுவனத்துடன், கோடிக்கணக்கில் பண பரிமாற்றம் நடந்திருப்பதற்கான ஆவணங்கள் சிக்கின. அதன் அடிப்படையில், சென்னை வேளச்சேரியில் உள்ள, உதய நிதியின் நெருங்கிய நண்பர் ஒருவர் வீட்டிலும் சோதனை நடந்துஉள்ளது.
அதேபோல, எழும்பூர் எத்திராஜ் சாலையில், வழக்கறிஞர் பாபு என்பவர், உதயநிதியின் ரசிகர் மன்றம் மற்றும் அறக்கட்டளை அலுவலகம் நடத்தி வருகிறார்.
அவரது அலுவலகத்திலும், அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது பாபு, அலுவலகத்தில் இல்லை என்பதால், நேரில் ஆஜராக உத்தர விட்டனர். அதன்படி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள, அமலாக்கத் துறை அலுவலகத்தில், பாபு நேற்று ஆஜரானார்.