பூரண மதுவிலக்கு ஒன்றே குறிக்கோள் என்றும், இதற்காக பாமக உள்ளிட்ட எந்த கட்சியுடன் இணைந்து செயல்படத் தயார் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் வளர்ச்சியே தனது விருப்பம் என்றும், போலியானாலும், நல்ல சாராயமாக இருந்தாலும், மதுவை ஒழிக்க வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு என்றும் மதுவில்லா கூறியுள்ளார்.
திமுக கூட்டணியில் இருந்து விலகுகிறீர்களா என்ற கேள்விக்கு, மதுவிலக்குக்கும் கூட்டணிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று பளிச் பதிலளித்தார்.
தமிழகத்தில் ஒரு துளி சாராயம் கூட இருக்கக்கூடாது என்பதே தனது கட்சியின் நிலைப்பாடு என்பதால், அதிமுக, பாமக, நாம் தமிழர் என எந்தக் கட்சியுடனும் கூட்டணி சேரத் தயார் என வெளிப்படையாக அறிவித்துள்ளார்.
ராமதாஸுடனான கருத்து வேறுபாட்டால் பாமகவில் இருந்து விலகிய வேல்முருகன், தனித்து கட்சி தொடங்கி நடத்தி வரும் நிலையில், முதல் முறையாக பாமகவில் இணைந்து செயல்படத் தயார் என அறிவித்திருப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
ராமதாசும், வேல்முருகனும் வட தமிழகத்தில் கணிசமான வாக்கு வங்கியைக் கொண்டிருப்பதால், இருவரும் இணைந்து செயல்பட்டால் அது அரசியல் களத்தில் திருப்புமுனையாக அமையலாம்.
திமுக கூட்டணி மீது வேல்முருகனின் கடும் அதிருப்தி பல்வேறு நிகழ்வுகள் மூலம் வெளிவரத் தொடங்கியுள்ளது.
பரந்தூர் விமான நிலையம், சட்டசபையில் பேச வாய்ப்பு மறுப்பு, என்எல்சி, மதுவிலக்கு என பல பிரச்னைகளில் திமுக அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வேல்முருகன் போராட்டம் நடத்தி வருகிறார்.