பம்மனேந்தல் ஸ்ரீ குருநாதசுவாமி கோயிலில் 48 ஆம் ஆண்டு குருபூஜை விழாவை முன்னிட்டு தேன்சிட்டு, பூஞ்சிட்டு என இரண்டு பிரிவுகளாக மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது :
இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பம்மனேந்தல் கிராமத்தில் அருள் பாலித்து கொண்டிருக்கும் ஸ்ரீ குருநாத சுவாமி கோயில் 48 ஆம் ஆண்டு குருபூஜை விழா,
ஸ்ரீ பெரிய நாச்சி அம்மன் கோயில் பொங்கல் விழா கடந்த 26 ஆம் தேதி காப்பு கட்டுதல் மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தினந்தோறும் குருநாத சுவாமி, பெரிய நாச்சி அம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன.
குருபூஜையை முன்னிட்டு 200 க்கு மேற்பட்ட பெண்கள் பால் குடம் எடுத்து ஊர்வலமாக சென்று தங்களுடைய நேர்த்தி கடனை நிறைவேற்றினர்.
சிறுவர்கள் உடலெங்கும் சேறுபூசிக்கொண்டு சேத்தாண்டி வேடம் அணிந்து நேர்த்திக்கடனை செலுத்தினர்.
இந்த நிலையில் குருபூஜை விழாவை முன்னிட்டு பம்மனேந்தல் கிராமத்தில் தேன் சிட்டு, பூஞ்சிட்டு என இரண்டு பிரிவுகளாக மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது .
இதில் தேன்சிட்டில் 14 மாடுகளும், பூஞ்சிட்டு பிரிவில் 22 மாடுகளும் பங்கேற்றன . மொத்தம் 36 மாட்டு வண்டி பந்தய வீரர்கள் போட்டியில் பங்கேற்றனர்.
தேன் சிட்டு மாடுகளுக்கு நான்கு கிலோமீட்டர் தூரமும், பூஞ்சிட்டு மாடுகளுக்கு 5 கிலோ மீட்டர் தூரமும் எல்லையாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டன.
இதில் காளைகள் வெற்றி இலக்கை நோக்கி சீறிப் பாய்ந்து சென்ற போது வழிகளில் ஆங்காங்கே நின்றிருந்த பொதுமக்கள் அவற்றுக்கு உற்சாகமூட்டினர்.
போட்டியில் வெற்றி பெற்ற மாடுகளுக்கும், மாட்டுவண்டி சாரதிகளுக்கும் குத்துவிளக்கு பரிசாக வழங்கப்பட்டது.
வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளருக்கும் சாரதிகளுக்கும் கமுதி அதிமுக ஒன்றிய அவைத் தலைவர் சேரன் பரிசுகளை வழங்கினார்.