கமுதி அருகே விண்ணேற்பு ஆண்டவர் ஆலய திருவிழாவை முன்னிட்டு 7 மணி நேரம் தேர் பவனி நடந்தது. இதில் மண்டியிட்டும், மெழுகுவர்த்தி ஏந்தியும் கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள திருச்சிலுவைபுரம் கிராமத்தில் விண்ணேற்பு ஆண்டவர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் மே 4ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து தினமும் இரவு சிறப்பு திருப்பலியும், பிரார்த்தனையும் நடைபெற்றது. இந்நிகழ்வில், பெரியவர்கள், குழந்தைகள் என அனைவரும் கலந்து கொண்டனர்.
விவசாயம் செழிக்கவும், பருவ மழை பெய்ய வேண்டியும், வெயிலின் தாக்கம் குறையவும் பக்தர்கள் சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்வான தேர்திருவிழா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது . அலங்கரித்து வைக்கப்பட்ட தேரில் விண்ணேற்பு ஆண்டவர், மரியன்னை, மிக்கேல் அதிதூதர் சுரூபங்கள் வைக்கப்பட்டு தேர் பவனி வந்தது.
இரவு 11 மணி அளவில் ஆரம்பிக்கப்பட்ட தேர்பவனி காலை 6 மணி வரை கிராமங்களில் உள்ள தெருக்களில் வழியாக பவனி வந்தது.
வான வேடிக்கையுடன் ஆடம்பர தேர் பவனி கிராமத்தில் உள்ள முக்கிய தெருக்கள் வழியாக விமர்சையாக நடைபெற்றது.
தேர் பவனியின்போது, பொதுமக்கள் தங்கள் விவசாய நிலத்தில் விளைந்த புது நெல்லை படையலிட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
இதே போன்று, குழந்தை வரம் வேண்டியும்,திருமணம் தடை நீங்கவும் பெண்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற தேரின் பின்பகுதியில் 200 மீட்டர் தூரம் மண்டியிட்டு வணங்கி சென்றனர்.
நிகழ்ச்சிக்காண ஏற்பாடுகளை திருச்சிலுவைபுரம் கிராமத்தை சேர்ந்த பங்குத்தந்தைகள் , ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
இதையும் படிங்க: CBSE 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு!