சேலம்,சிவகங்கை ஆகிய இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது. வழக்கமாக இஸ்லாமியர்களை குறிவைத்து, மத்திய ஏஜேன்சிகள் செயல்பட்டுவருவதாக குற்றம்சாட்டப்பட்டு வந்த நிலையில், தற்போது, விக்னேஷ்வரன் என்பவரின் வீட்டிற்குள் என்.ஐ.ஏ அதிகாரிகள் நுழைந்துள்ளனர்.
சமீபத்தில் ஒன்றிய அரசால் தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற அமைப்பு, கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் பல்வேறு விசயங்களுக்கு குரல் கொடுக்கும் அமைப்பாகவும் செயல்பட்டு வந்தது.
குறிப்பாக சிறுபான்மையினர் பிரிவில் இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீடு, கல்வி, வேலை வாய்ப்பு, இஸ்லாமியர் ஒடுக்குமுறை என இஸ்லாமியர்கள் சார்ந்த பிரச்னைகளுக்கு முன் நின்றது. இந்நிலையில், சட்டவிரோதமாக நிதி திரட்டுவதாகவும், ஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாக கூறி கடந்த சில வாரங்களாக தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம் கடலூர், திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு நிர்வாகிகளுக்கு சொந்தமான இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது. இதையடுத்து திடீரென அந்த அமைப்பு தடை செய்யப்படுவதாக ஒன்றிய அரசு அறிவித்தது.
இந்நிலையில், சிவகங்கையில் விக்னேஸ்வரன் என்பவரது வீட்டில் NIA அதிகாரிகள் 3 பேர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். ஓட்டுனராக பணிபுரியும் விக்னேஸ்வரன் விடுதலை புலிகள் அமைப்பினரின் தொடர்பு இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிவகங்கை கல்லூரி சாலையில் மன்னர் துரைசிங்கம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி எதிரில் விக்னேஸ்வரன் வீடு அமைந்துள்ளது. அதிகாலை 6.00 மணி அளவில் தேசிய புலனாய் துறை அதிகாரிகள் மூன்று பேர் விக்னேஸ்வரன் வீட்டில் திடீர் சோதனை மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஓட்டுனராக பணிபுரியும் விக்னேஸ்வரன் விடுதலை புலி இயக்கங்களுடன் தொடர்பில் இருந்ததாக வந்த தகவலின் அடிப்படையில் சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது. வீட்டில் இருந்த விக்னேஸ்வரனிடம் விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் வீட்டில் இருந்த விடுதலைப்புலி தலைவர் பிரபாகரனின் புகைப்படம் மற்றும் புத்தகங்கள் கையேடுகளை கைப்பற்றினர்.
சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக நீடித்த இச்சோதனை 8.00 மணிக்கு நிறைவு பெற்றுது. மேலும், வழக்கமாக என்.ஐ.ஏ அதிகாரிகள் கூறிவரும் கூற்றான ‘சோதனையில் முக்கிய ஆவணங்களை கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
விக்னேஸ்வரன் நாம் தமிழர் கட்சியின் தொண்டர் என கூறப்படுகிறது. சமீபத்தில் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு ஒன்றிய அரசு தடை விதித்ததற்கு நாம் தமிழர் கட்சி சீமான் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், இந்த அதிரடி சோதனை நாம் தமிழர் கட்சி பக்கம் திரும்பியிருப்பது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக இருக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.