கடந்த சில நாட்களுக்கு முன் வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் ஒரு காட்டு காட்டிய நிலையில் தற்போது நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள செய்தியில் :
கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அங்கு மீண்டும் மழைப்பொழிவு ஏற்பட்டால் சீரமைக்கும் பணியில் சிக்கல் ஏற்படுவதுடன் பொதுமக்கள் மீண்டும் சிரமத்திற்கு ஆளாக வேண்டி இருக்கும் என்பதை சென்னை வாசிகள் அனைவரும் இப்போதைக்கு மழை வேண்டாம் என வருணபகவானை வேண்டி வருகின்றனர்.