சென்னையில் 4 இடங்களில் விநாயகர் சிலைகளை கரைக்கலாம் என சென்னை காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை மாநகர எல்லைக்குள் மட்டும் 1,510 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், இந்த விநாயகர் சிலைகளை அந்தந்த பகுதிகளில் உள்ள கடற்கரைகளில் கரைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மேலும், வருகிற சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை (23.09.23 – 24.09.23) ஆகிய தேதிகளில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இதற்காக, சென்னையில் உள்ள 4 இடங்களில் விநாயகர் சிலைகளை கரைக்கலாம் என காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, பட்டினம்பாக்கம், நீலாங்கரை, காசிமேடு மற்றும் திருவொற்றியூர் ஆகிய இடங்களில் விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட இந்த இடங்களில் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது 18 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
காவல் துறை அறிவித்துள்ள கட்டுப்பாடுகளை மீறுவோர் மீதும் மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்போர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.