அதிமுக பொதுக்குழுவில் ஏற்பட்ட சலசலப்புகளுக்கு பிறகு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் டுவிட்டர் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
இன்று அதிமுக வின் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்படவிருந்த 23 தீர்மானங்கள் பொதுக்குழு உறுப்பினர்களால் நிராகரிக்கப்பட்டு ஒற்றைத் தலைமை என்ற ஒரே தீர்மானம் வேண்டும் என பொதுக்குழு உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர் என்று கே.பி.முனுசாமி மற்றும் சி.வி.சண்முகம் அறிவித்ததால் பொதுக்குழு கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. மேலும் ஓபிஎஸ்-க்கு எதிராகவும், ஈபிஎஸ்-க்கு ஆதரவாகவும் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
முன்னதாக இந்த பொதுக்குழுவிற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலிருந்தும் பொதுக்குழு,செயற்குழு உறுப்பினர்கள் வந்துகொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் சூழ எடப்பாடி பழனிச்சாமி பொதுக்குழுவிற்கு வருகை தந்தார்.
அவருக்கு ஆதரவாக ஈபிஎஸ் வாழ்க.. எடப்பாடியார் வாழ்க.. என அவரது ஆதரவாளர்கள் கோஷங்கள் எழுப்பின. இந்த நிலையில், ஓ.பன்னீர் செல்வம் தேர்தலுக்காக பயன்படுத்தப்படும் பிரச்சார வாகனத்தில் தனது தொண்டர்கள் சூழ வருகை தந்தார். அவருக்கு பெரிதாக தொண்டர்கள் கூட்டம் கூடவில்லை, இந்த நிலையில், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பொதுக்குழு கூட்டத்தை விட்டு வெளியேறினர்.
இந்த பரபரப்பான நிலையில், பொதுக்குழு முடிந்த கையோடு, கடலூர் மாவட்டத்தில் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார் ஓ.பன்னீர் செல்வம். அந்த இரங்கல் கடிதத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா புகைப்படங்கள் இல்லாமல் கட்சியின் கொடி, எதுவுமே இல்லாமல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் அவர்களின் பதிவு’ என பதிவிடப்பட்டுள்ளது.
அவரது டுவிட்டர் பதிவில்;
“கடலூர் மாவட்டம் – எம்.புதூர் தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 4பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த செய்தி மிகுந்த மனவேதனை அளிக்கிறது. இவ்விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொண்டு, காயமடைந்தவர்கள் விரைவில் பூரண குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்” என தனது பதிவில் தெரிவித்துள்ளார்.