ஒடிசா ரயில் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் கோர விபத்தில் சிக்கியது. நேற்று மாலை 7 மணி அளவில் இந்த விபத்து நிகழ்ந்த இந்த விபத்தில் இதுவரை 200-க்கும் மேற்பட்டோர் உயிரிந்துள்ள நிலையில், படுகாயமடைந்த 1000-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த ரயிலில் பயணித்தவர்களில் பலர் புலம்பெயர் தொழிலாளர்கள் என்ற தகவல் வெளியாகியுள்ள நிலையில், தமிழகத்தை சேர்ந்த 140 பயணிகள் பயணித்து இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னை எழிலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மாநில அவசர கால கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, கோரமண்டல் விரைவு ரயில் விபத்துக்குள்ளானது குறித்த தகவல்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
இதனைத் தொடர்ந்து, “ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் நிவாரணமாக தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்படும்” என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மேலும், ஒடிசா ரயில் விபத்தில் படுகாயம் அடைந்த தமிழ்நாட்டை சேர்ந்த 50 பேர் விமான மூலம் சென்னைக்கு அழைத்துவர ஏற்பாடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ரயில் விபத்து மீட்புப் பணிகள் மற்றும் கள நிலவரம் குறித்து ஆய்வு செய்ய ஒடிசா சென்றடைந்த அமைச்சர்கள் உதயநிதி மற்றும் சிவசங்கர் கொண்ட குழுவினர் ஓடிசாவில் இருந்து விபத்து நடைபெற்ற இடத்திற்கு ஹெலிகாப்டரில் சென்று நிலவரங்கள் குறித்து ஆய்வு செய்கிறார்.
இதனிடையே, ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 2 லட்சமும் நிவாரண உதவி வழங்கப்படும் என ரயில்வேதுறை அறிவித்துள்ளது.