சென்னை குரோம்பேட்டை எம்.ஐ.டி கல்லூரி விடுதி மாணவர்கள் 50 பேருக்கு ஒமிக்ரான் அறிகுறி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தாம்பரம் அடுத்த குரோம்பேட்டையில் எம்ஐடி கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். மேலும் கல்லூரி வளாகத்தின் உள்ளே என்ஆர்ஐ மாணவிகளுக்கு என்று தனியாக நான்கு விடுதிகளும், மாணவர்களுக்கு தனியாக நான்கு விடுதிகள் அமைந்துள்ளது. இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை முதல் தாம்பரம் மாநகராட்சி சார்பில் கல்லூரி விடுதியில் தங்கியுள்ள மாணவ மாணவியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
அதன்படி முதலில் விடுதியில் தங்கி உள்ள மாணவிகளுக்கு பரிசோதனை செய்ததில் கடந்த சனிக்கிழமை 4 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள 80 மாணவர்களின் 50 பேருக்கு ஒமிக்ரான் அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது. நேற்று 67 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று மேலும் 13 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுவரை 1,747 மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனை செய்தததில் 330 பேரின் பரிசோதனை முடிவுக்காக காத்திருக்கினறனர். இதனையடுத்து தாம்பரம் மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் கல்லூரி விடுதியில் தங்கியுள்ள மாணவ, மாணவியர்களை கல்லூரியிலேயே தனிமை படுத்தி உள்ளனர்.
மேலும் கல்லூரி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு மாணவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் யார் என்பது குறித்து கணக்கெடுத்து அவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்து தனிமை படுத்தும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் கல்லூரி வளாகத்தில் இருந்து மாணவர்கள் வெளியே செல்லக் கூடாது என்றும், எப்போதும் முகக்கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று அதிகாரிகள் மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.