ரஷ்யா முழுவதற்கும் அக்டோபர் 30 ஆம் தேதியில் இருந்து நவம்பர் 7 ஆம் தேதி வரை ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்படுகிறது.
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ஒரு வாரம் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படுவதாக அந்நாட்டு அதிபர் புடீன் அறிவித்துள்ளார்.
ரஷ்யாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்கள் ஆர்வம் காட்டாததே தற்போது வைரஸ் பரவல் அதிகரித்தற்குக் காரணம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கொரோனா தடுப்பூசி செலுத்ததாத 60 வயதிற்கு மேற்பட்டோர் வீட்டில் இருந்து பணிபுரிய அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில் சமூகப்பணியாளர்களுக்கு தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ரஷ்யா முழுவதற்கும் அக்டோபர் 30 ஆம் தேதியில் இருந்து, நவம்பர் 7ஆம் தேதி வரை ஒரு வாரம் ஊதியத்துடன் விடுமுறை வழங்கப்படுவதாக அந்நாட்டு அதிபர் விளாதிமிர் புடீன் அறிவித்துள்ளார்.
மேலும் ரஷ்யர்கள் பொறுப்பை உணர்ந்து கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என அந்நாட்டு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.