ஆன்லைன் சூதாட்டத்தில் பல லட்ச ரூபாய் இழந்த வாலிபர், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கோயம்பேடு சின்மயா நகரை சேர்ந்தவர் தினேஷ் (41). இவர், அதே பகுதியில் பிரவுசிங் சென்டர் நடத்திவந்தார். இவரின் மனைவி நளினி (33). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
இந்த நிலையில், குடிப்பழக்கத்துக்கு அடிமையான தினேஷ், ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதன்காரணமாக தன்னிடம் இருந்த பணம் மற்றும் மனைவியின் நகைகள் உள்பட அனைத்து பொருட்களை அடமானம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். ஆனால் அவற்றில் வெற்றிப்பெற முடியாததால் பல லட்சத்தை தினேஷ் இழந்துள்ளார்.
இதனால் இழந்த பணத்தை மீட்க நண்பர்கள், தெரிந்தவர்கள் என பலரிடம் பல லட்சம் கடன் வாங்கி சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் பல லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்த பணத்தை எப்படி அடைக்கப்போகிறோம் என்று தெரியாமல் தினேஷ் அதிர்ச்சி அடைந்தார். இதை நினைத்து சில நாட்களாக கடும் மனஉளைச்சலில் இருந்துள்ளார்.
இந்த நிலையில், இன்று அதிகாலை தனது வீட்டில் திடீரென தினேஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மனைவி, குழந்தைகள் பார்த்து கதறி துடித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கோயம்பேடு போலீசார் சென்று தினேஷின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.