கோவில் சீரமைப்புக்காக ரூ.50 லட்சம் நிதி திரட்டி மோசடி செய்ததாக கைது செய்யப்பட்ட பாஜக ஆதரவாளரான யூ டியூபர் கார்த்திக் கோபிநாத் வங்கி கணக்கில் ரூ.3 லட்சம் மட்டுமே உள்ளதால் எஞ்சிய பணம் எங்கே என கேள்வி எழுந்துள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலுக்கு சொந்தமான கோவில் ஒன்றில் சிலைகளை மர்ம நபர்கள் உடைத்திருந்தனர். இந்த சிலைகள் உடைப்பு தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்தனர். ஆனால் கோவில் சிலைகளை மாற்று மதத்தினரே உடைத்துவிட்டதாக சமூக வலைதளங்களில் இந்துத்துவா அமைப்பினர் தீவிர பிரசாரம் செய்தனர்.
இதற்கிடையே இளையபாரதம் எனும் தலைப்பில் யூடியூப் நடத்தி வந்த பாஜக ஆதரவாளரான கார்த்திக் கோபிநாத், இணையம் மூலமாக இக்கோவில் சீரமைப்புக்கு நிதி திரட்டுவதாக அறிவித்தார்.
சிறுவாச்சூர் கோவில் சீரமைப்புக்காக கார்த்திக் கோபிநாத் மொத்தம் ரூ.50 லட்சம் நிதி திரட்டி உள்ளார். இதில் ரூ 6 லட்சத்தை தமது சொந்த வங்கி கணக்குக்கு மாற்றியிருந்தார். இந்த நிலையில் இந்து அறநிலையத்துறையின் அனுமதி பெறாமல் கோவில் சீரமைப்புக்கு கார்த்திக் கோபிநாத் நிதி வசூல் செய்து மோசடி செய்ததாகவும் சென்னை ஆவடி போலீசில் புகார் தெரிவிக்கபட்டது.
இந்த புகாரின் அடிப்படையில் ஆவடி போலீசார் கார்த்திக் கோபிநாத்தை நேற்று கைது செய்தனர். கார்த்திக் கோபிநாத்தின் கைதுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மூத்த பாஜக தலைவர் எச்.ராஜா உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமியும் கார்த்திக் கோபிநாத் கைதுக்கு கண்டனம் தெரிவித்திருப்பதுடன் அவருக்கு ஆதரவாக சட்டப் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.
இதனையடுத்து நீதிபதி முன் கார்த்திக் கோபிநாத் நீதி மனறத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாட்கள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனிடையே கார்த்திக் கோபிநாத்தை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
இந்த நிலையில் தற்போது வங்கி கணக்கில் ரூ.3 லட்சம் மட்டுமே உள்ளதால் எஞ்சிய பணம் எங்கே என்று காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.